"நானும் என் குடும்பமும் மன உளைச்சலில் இருக்கிறோம்" வதந்திகளுக்கு  நடிகை நிவேதா பெத்துராஜின் பதிலடி!

Nivetha Pethuraj
Nivetha Pethuraj
Published on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பன்முக நடிகையாக இருந்து வருகிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். இவருடைய மாறுபட்ட கதாப்பாத்திரம் மற்றும் நடிப்பிற்கு  இவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளம். இவர் ஒரு சினிமா நடிகையாக மட்டுமில்லாமல் மிகச்சிறந்த கார் ரேஸராகவும், பேட் மிட்டன் விளையாட்டு வீராங்கனையாகவும் தொடர்ந்து தன்னுடைய பன்முகத்தையும் வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் குறித்து வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. நடிகை நிவேதா பெத்துராஜுக்கு அரசியல் வாரிசு ஒருவர் பெரும் ஆதரவாக இருப்பதாகவும் அவர் நிவேதவிற்கு பண உதவி அளித்து வருவதாகவும் பத்திரிகையாளர் ஒருவர் செய்திகள் பரப்பியுள்ளார். அவை அனைத்திற்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் விளக்கமளித்துள்ளார் நிவேதா. தற்போது இது  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சினிமாப் பயணம்:

மதுரையில் பிறந்து வளர்ந்த நிவேதா கடந்த 20 ஆண்டுகளாக பெற்றோருடன் துபாயில் வசித்து வந்துள்ளார்.  சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக சென்னைக்கு வந்துள்ளார். 2016ம் ஆண்டு வெளியான ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதன்பின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் நடித்த அவருக்கு தெலுங்கில் ‘மெண்டல் மதிலோ’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன், அல்லு அர்ஜுன் நடித்த அலா வைகுந்தபுரமுலோ, சங்கத்தமிழன், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், பிளடி மேரி  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜெயம்ரவி நடித்த  ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடிகை நிவேதா ஒரு விண்வெளி வீராங்கனையாக சிறப்பாக நடித்து அதிகளவிலான ரசிகர்களின் கவனத்தையும்  ஈர்த்தார்.

கார் ரேஸர்:

நடிகை நிவேதா மிகச்சிறந்தக் கதாப்பாத்திரம் மற்றும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சினிமா நடிகையாக மட்டுமில்லாமல், அதனைத் தாண்டி பல சாதனைகளையும் நிகழ்த்தி வருகிறார். நடிகர் அஜித்தைப் போலவே மிகச்சிறந்த கார் ரேஸராகவும் இருந்துவருகிறார். அந்த வகையில் பார்முலா கார் பந்தயத்தில்  பங்கேற்ற இவர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இன்ஸ்ட்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கார் ரேஸ்களில் கலந்து கொள்ளும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்வது வழக்கம். அதனை பார்க்கும் ரசிகர்கள் இவரை "லேடி தல" என்று அழைக்க  ஆரம்பித்து விட்டனர்.

பேட்மின்டன் பிளேயர்:

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் மதுரை  அணி சார்பாக ‘மிக்ஸ்ட் டபுள்ஸ்’ அதாவது கலப்பு இரட்டையர் பிரிவில்  பேட்மின்டன் போட்டியில் பங்கேற்றுள்ளார். சாதாரணமாக பங்கேற்றது மட்டுமின்றி  நிவேதா பெத்துராஜ் சாம்பியன் பட்டத்தையும்  வென்று கோப்பை மற்றும் பதக்கத்தை பெற்றுள்ளார்.

சர்ச்சையும் பதிலடியும்:

நடிகை நிவேத்தா பெத்துராஜை மையமாக வைத்து அவர் அரசியல் வாரிசு ஒருவரின் உதவியுடன் துபாயில் சொந்த வீடு வாங்கினார் போன்ற பல்வேறு வதந்திகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் பரவத்தொடங்கின. இவை அனைத்திற்கும் விளக்கமளிக்கும் விதமாக நடிகை நிவேத்தா தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

“கடந்த சில நாட்களாக பரவும் வதந்திகளால், நானும் என் குடும்பமும் அதிகமான  மன உளைச்சலில் இருக்கிறோம். இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பும் முன் யோசித்துப் பாருங்கள். என்னுடைய 16 வயதிலிருந்து நான் பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் தான் வாழ்ந்து வருகிறேன். 2002ஆண்டிலிருந்தே கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக துபாயில் வாடகை வீட்டில்தான் நாங்கள் வசித்து வருகிறோம்.

திரைத்துறையிலுமே கூட நான் இதுவரை எந்த தயாரிப்பாளரிடமோ, இயக்குநரிடமோ அல்லது ஹீரோவிடமோ சென்று பட வாய்ப்புகேட்டு நின்றது கிடையாது. நான் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளேன். அவையெல்லாம் என்னை தேடி வந்த வாய்ப்புகள்தான். நான் ஒருபோதும் பணத்துக்காகவோ, வேலைக்காகவோ பேராசையுடன் இருந்ததே இல்லை.

இதையும் படியுங்கள்:
HBD Mari Selvaraj - மாரி செல்வராஜ்: தெற்கேயிருந்து ஒரு கணீர் குரல்!
Nivetha Pethuraj

2013-ம் ஆண்டிலிருந்து கார் ரேஸிங்கில் என்னுடைய சொந்த விருப்பத்திற்காக மட்டும் தான்  நான் கலந்து கொண்டு வருகிறேன். அதிலும் சென்னையில் நடக்கும் போட்டிகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இதுதவிர என்னைப் பற்றி இதுவரையில் பேசப்படும் அவதூறுகளில் எதுவுமே உண்மையில்லை.

நான் மிகவும் எளிமையான வாழ்க்கையைத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்த பிறகு, இறுதியாக நல்ல இடத்தில் இருக்கிறேன். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை மட்டுமே  வாழ விரும்புகிறேன்.... உங்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போலவே.

இந்த வதந்தி குறித்து நான் சட்டரீதியாக ஏதும் எடுத்துச் செல்லவில்லை. இன்னும் பத்திரிகைத் துறையில் மனிதம் மீதமிருக்கிறது என்பதை நம்புகிறேன். பத்திரிகையாளர்கள் தங்களுக்கு வரும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்த பிறகு அதனைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். எங்கள் குடும்பத்தை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்காதீர்கள். எனக்காக இதுவரையில் பேசிய அனைவருக்கும் நன்றி” என்று நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com