

குமார் இயக்கத்தில் ரமேஷ் கண்ணா, அபிஷேக் நடித்துள்ள படம் நிழல். ரமேஷ் கண்ணாவிற்கு இரண்டு மகள்கள் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒரே போல இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களின் உருவ ஒற்றுமையை பயன்படுத்தி அக்கா சொல்ல வேண்டிய இடத்தில் தங்கையும் தங்கை செல்ல வேண்டிய இடத்தில் அக்காவும் சென்று விடுவார்கள். இதை ஒரு விளையாட்டாக இவர்கள் இருவரும் செய்து வருகிறார்கள். விளையாட்டும் ஒரு நாள் வினையாகிறது. இவர்களில் மூத்த மகள் மருத்துவமனையில் பணிபுரிகிறாள். மூத்த மகளுக்கு ஒரு நாள் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை அந்நாளில் தன்னை போலவே இருக்கும் தனது தங்கையை அனுப்புகிறாள்.
இளைய மகள் மருத்துவமனைக்கு செல்லும் நாளில் அந்த மருத்துவமனையில் உள்ள சில நபர்கள் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்வதை பார்க்கிறாள். உடனே இதை தடுக்க முயற்சிக்கிறாள் இளைய மகள். இந்த முயற்சியில் அந்த நபர்கள் இவரையும் தாக்குகிறார்கள் ரமேஷ் கண்ணா குடும்பம் நீதிமன்றத்தை நாடுகிறது. ஆனால் நீதிமன்றமும் காவல் துறையும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை தர சாட்சி வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் போதுமான சாட்சி இல்லாததால் இவர்களுக்கு தண்டனை கிடைக்கவில்லை. அதன் பிறகு இவர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்கிறது மீதி படம்.
பெண்களின் பாதுகாப்பை மையப்படுத்தி பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன அதைப்போல ஒரு படம் தான் இந்த நிழல் படமும். உருவ ஒற்றுமை கொண்ட அக்கா தங்கைகள், மருத்துவமனையில் அக்காவிற்கு பதிலாக தங்கை செல்வது, அங்கே ஒரு பிரச்சனை என்று யோசித்த விதம் எல்லாம் சரிதான்.
ஆனால் இந்த சரியான கதையை வைத்துக் கொண்டு சரியான திரைக்கதை என்ற திசையில் செல்லாமல் சற்று குழம்பி இருக்கிறார் டைரக்டர். இதனால் அடுத்தடுத்து நடக்க வேண்டிய காட்சிகள் கூட நம்மால் யூகிக்க முடிகிறது. இருந்தாலும் சில காட்சிகள் நம்மை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக நீதிமன்றத்தில் அபிஷேக் வாதிடும் இடம் நன்றாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை குற்றவாளி போல் காட்டும் இடம் நமது நாட்டின் பல நீதிமன்ற நடைமுறைகளை கண்முன் கொண்டு வருகிறது.
இடைவெளிக்குப் பிறகு ரமேஷ் கண்ணாவை திரையில் பார்க்க முடிகிறது ஒரு அப்பாவாக தன் மகளுக்கு நேர்ந்த கொடூரங்களை தட்டிக் கேட்க முடியாமல் தவிக்கும் இடத்திலும், நீதிமன்ற வாசலில் திட்டும் போதும் ரமேஷ் கண்ணா நன்றாக நடித்து இருக்கிறார்.
அபிஷேக் ஒரு வக்கீலாக கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு வித்தியாசமான நடிப்பை தந்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க நமது வக்கீல்கள் எந்த அளவிற்கு செல்வார்கள் என்பதை எதார்த்த பாணியில் தன் நடிப்பின் மூலம் காட்டியுள்ளார் அபிஷேக். ஹீரோயின் ஜனனி நல்ல நடிக்கத் தெரிந்த ஹீரோயினாக இருக்கிறார். இரட்டையராக நடித்தாலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பையும் ஆளுமையும் வெளிக்கொணர்ந்திரக்கிறார்.
வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருந்த விசாகன் ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார் ஒரு போலீஸ் அதிகாரியாகவும் ரொமான்ஸ் செய்யும் இடத்திலும் இவரது நடிப்பு ஓரளவு பரவாயில்லை.
அப்துல் பக்கரின் இசையில் பாடல்கள் எதுவும் ரசிக்கும்படி இல்லை. ஆனால் பின்னணி இசை பரவாயில்லை. ஒளிப்பதிவு இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.
ஒரு சிறு பிரச்சனையை கூட பெரிதாக்கி அதை பெண்ணின் தலையில் ஏற்றி விடும் நடைமுறை எப்படி இருக்கிறது என்பதை இந்த படம் சொல்லி இருக்கிறது. இது ஒரு மாறுபட்ட கதை தான். ஒரு மாறுபட்ட சிந்தனை தான். ஆனால் சொன்ன விதம் மிகவும் சாதாரணமாகவும் மற்ற படங்களில் வரும் மசாலாக்கள் கொண்டிருப்பதால் இந்த படம் ஒரு சராசரி படமாக நகர்ந்து விடுகிறது.
நான் லீனியர் வடிவில் இந்த திரைக்கதை வடிவமைப்பதில் இயக்குனருக்கு சற்று குழப்பம் ஏற்பட்டதால் இந்த படம் முழுமையாக நம்மால் ரசிக்க முடியவில்லை. சரியான திரைக்கதையை அமைத்திருந்தால் இந்த நிழல் மிகவும் பிரகாசமாக இருந்திருக்கும். நிழல் யோசித்த விதம் ஓகே, சொன்ன விதம் மிகச் சாதாரணம்.