விமர்சனம்: ‘ஒற்றைப் பனை மரம்’ கடலுக்கு அப்பால் ஒரு கூக்குரல்!
ரேட்டிங்(4 / 5)
போர் நடைபெற்று முடிந்த பின்பு அந்தப் பகுதியில் வாழும் மக்கள் படும் வேதனையை வார்த்தைகளால் சொல்ல இயலாது. நமது அண்டை நாடான இலங்கையில் நம் தமிழ் சகோதரர்கள், ‘உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் எப்படி இருக்கும்’ என்பதற்கு மௌன சாட்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் குரலாக ஒலித்துள்ளது, 'ஒற்றைப் பனை மரம்' திரைப்படம்.
பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இலங்கை தமிழரான புதியவன் ராசையா இப்படத்தை இயக்கி உள்ளார். RSSS பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
2009 ஈழப்போரின் இறுதி நேரத்தில் படம் தொடங்குகிறது. கஸ்தூரி என்ற போராளி சயனைடு அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். சுந்தரம் என்ற போராளி இதைத் தடுக்கிறார். இருவரும் ராணுவ முகாமில் சரணடைகிறார்கள். அங்கே உள்ள அதிகாரி கஸ்தூரியிடம் மோசமாக நடந்து கொள்கிறார். சுந்தரம், சுந்தரத்தின் வளர்ப்பு பெண் அஜா, கஸ்தூரி மூவரும் இணைந்து வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள். முன்னாள் போராளி என்பதால் கஸ்தூரிக்கு யாரும் வேலை தர மறுக்கிறார்கள். மிகவும் வறுமையான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார். சுந்தரம் மீண்டும் அரசியல் பேசுகிறார். இதனால் அதிகார வர்க்கத்தால் மோசமாக தாக்கப்படுகிறார். வறுமை நிலையால் பெண்கள் பாலியல் தொழிக்குத் தள்ளப்படுவது, பல்வேறு அச்சுறுத்தல், இளைஞர்கள் குற்றவாளிகளாக மாறுவது என சமகால இலங்கை தமிழர்களின் நிலைக்கு என்னதான் தீர்வு என்ற கேள்வியை முன் வைக்கிறது ஒற்றைப் பனை மரம் திரைப்படம். உலக அளவில் சமகால ஈழ தமிழர்கள், ஒற்றைப் பனை மரம் போல் தனியாக இருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் இப்படத்தின் டைரக்டர்.
படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் கிளிநொச்சி, வவுனியா போன்ற போர் நடைபெற்ற பகுதிகளில் படமாக்கப்பட்டிருப்பது நம்மை இன்னும் நெருக்கமாக்குகிறது. ஈழ தமிழ் பேசும் ஈழ மக்களையே நடிக்க வைத்திருப்பது படத்துக்கு கூடுதல் சிறப்பு. இயக்குநர் புதியவனே சுந்தரமாக நடித்திருக்கிறார். ஒரு போராளி இன்றைய தினத்தில் சமூகத்தால் பார்க்கப்படும் விதத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். கஸ்தூரியாக நடித்துள்ள நவயுகாவின் நடிப்பு ஒரு முன்னாள் பெண் போராளி இன்றைய ஈழத்தில் எப்படி நடத்தப்படுகிறார் என்பதை நமக்கு உணர்த்துகிறது. வதை முகாம், வெள்ளை வேன் என நாம் ஊடகங்களில் கேள்விப்பட்ட விஷயத்தை நேரிடையாகப் பார்க்கும்போது மனது வலிக்கிறது. ஈழத் தமிழர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னும் ஆழமாகச் சொல்லியிருந்தால் படம் இன்னமும் நம் நெஞ்சை தொட்டிருக்கும்.
இங்கே நம் தமிழ்நாட்டில் சில அமைப்புகள் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என எதிர்கின்றன. ஈழப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இலங்கையின் வடக்குப் பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். இந்தக் காட்சி இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது. இங்கே இந்தப் படத்தை எதிர்ப்பவர்களுக்கு இந்தக் காட்சி பிடிக்காமல் இருக்கலாம். ஜனநாயக நாட்டில் ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல் இது. மேலும், பிரபாகரன் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தலைவர் இல்லையே? இந்தப் படத்தை நல்ல சினிமா என்று சொல்வதை விட வலிகள் நிறைந்த ஒரு வாழ்க்கை பதிவு என்று சொல்லலாம். ஹிட்லர் நடத்திய இனப் படுகொலையை பல படங்கள் பதிவு செய்துள்ளன. நமது தமிழ் உறவுகள் ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு பிந்தைய வாழ்க்கையை பதிவு செய்துள்ள இந்த முயற்சியை, ‘நீங்கள் ஒற்றைப் பனை மரம் அல்ல, நாங்கள் இருக்கிறோம்’ எனச் சொல்லும் விதத்தில் இப்படத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டுவோம்.