

சமீபத்தில் ஓடிடியில் வெளியான சட்லஜ் என்ற திரைப்படம் பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில் , மத்திய அரசாங்கம் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்துள்ளது. நீண்ட காலமாக ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சென்சார் போர்டு சான்றிதழ் பெறப்ப்படுவதில்லை. அந்த திரைப்படங்கள் தணிக்கை குழுவின் அதிகாரங்களுக்கு உட்படாததால், தங்கள் விருப்பப்படி கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.
அதே நேரம் திரைப்படங்களில் வரும் வன்முறை காட்சிகள் , மோசமான சித்தரிப்புகள் , மோசமான வார்த்தைகள் , அரசியல் பிரச்சனைகள் , மதம் சார்ந்த பிரச்சினைகள் , ஆபாசக் காட்சிகள் ஆகியவை இந்த தளங்களின் மூலம் கட்டுப்பாடு இன்றி வெளிவந்துள்ளன. நீண்ட காலமாக எதையும் கண்டு கொள்ளாமல் இருந்த மத்திய அரசு தற்போது விழித்துள்ளது.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான 'சட்லஜ்' என்ற பஞ்சாபி மொழித் திரைப்படம் ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த திரைப்படம் பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாதிகளின் காலங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மனித உரிமை ஆர்வலர் ஜஸ்வந்த் சிங் கல்ராவின் வாழ்வையும் மையமாகக் கொண்டது இந்த படம்.
இந்தப் படத்தில் உள்ள ஏராளமான காட்சிகள் சர்ச்சைக்குரிய வகையில் இருந்துள்ளது. அந்த திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்காக தணிக்கை வாரியத்திற்கு அனுப்பப்பட்ட போது ஏராளமான சிக்கல்களை சந்தித்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை அவர்கள் கத்தரிக்க சொல்லி இருந்தனர். ஆயினும் பட தயாரிப்பு நிறுவனம் தங்களது நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு திரைப்படத்தை நேரடியாக ZEE5 ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த தளத்தில் வெளியான 48 மணி நேரத்தில் திரைப்படத்தை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் விளைவாக, டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மத்திய அரசின் தணிக்கை விதிகளைக் கொண்டுவரும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
தற்போது நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப விதிகளின்படி, ஓடிடி தளங்கள் தாங்களே உள்ளடக்கங்களை வகைப்படுத்தி (Self-classification) வெளியிடுகின்றன. இதற்காக சென்சார் போர்டு (CBFC) சான்றிதழ் பெற வேண்டிய கட்டாயம் இல்லை. அதே நேரம் சட்லஜ் மாதிரியான திரைப்படங்கள் தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் மத்திய அரசு கருதுகிறது.
இந்த திரைப்படம் சென்சார் போர்ட்டினால் பல மாற்றங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, அதை மீறி ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் , ZEE5 ஓடிடி தளம் மீது நாடு முழுக்க கடுமையாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக மத்திய அரசு ஒரு குழுவை அமைத்து இந்த திரைப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப தடை செய்துள்ளது.
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு சென்சார் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அது போல ஓடிடி படங்களுக்கும் சென்சார் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் தற்போதைய யோசனையாக இருந்து வருகிறது. இது விரைவில் நடைமுறைக்கு வரும் போது வன்முறை, ஆபாசம் , ஜாதி மதம் சார்ந்த வெறுப்புணர்வை துண்டும் கருத்துக்கள் ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.
அரசு ஓடிடி தளங்களுக்கு இந்த தணிக்கை விதியைக் கொண்டுவந்தால், தயாரிப்பாளர்கள் அதே படங்களை யூடியூப் அல்லது சமூக வலைதளங்களில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி பதிவேற்ற வாய்ப்புள்ளது. அதனால், அதையும் கட்டுப்படுத்துவதை பற்றி இப்பொழுது சிந்திக்க வேண்டும். இதற்கு முன்பே 'லாரன்ஸ் ஆஃப் பஞ்சாப்' திரைப்படத்தை வெளியிட்டு ZEE5 சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.