நீலம் தயாரிப்பு நிறுவனம் என்றாலே சினிமா தணிக்கை குழு அலர்ட் ஆகி விடுவதாக இயக்குநரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
பா. ரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரித்துள்ள ப்ளூ ஸ்டார் படத்தை அறிமுக இயக்குனர் ஜெயக்குமார் இயக்கி உள்ளார். மேலும் இப்படத்திற்கு தமிழ் பிரபா திரைக்கதை வசனம் அமைத்துள்ளார். அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ப்ளூ ஸ்டார் என்ற கிரிக்கெட் குழுவின் கேப்டன் (அசோக் செல்வன் ) தான் ஒரு விளிம்பு நிலை சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் பல்வேறு அவமானங்களையும், பிரச்சனை களையும் சந்திக்கிறார்.
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், நீலம் புரொடக்ஷன் படம் சென்சாருக்கு வருகிறது என்றாலே, படத்தில் இதெல்லாம் இருக்கப் போகிறது என தணிக்கை குழு அலர்ட் ஆகிவிடுவார்கள் எனத் தெரிவித்தார்.
ப்ளூ ஸ்டார் படம் வெளியாகக் கூடாது என கருத்துகள் வெளிவரத் தொடங்கியது தனக்கு ஆச்சர்யமாக இருந்ததாகவும் பா.ரஞ்சித் கூறினார். தன்னை ரஞ்சித்தாக யாரும் பார்ப்பதில்லை என்றும் தான் பேசும் அரசியலைதான் உறு கவனிக்கிறார்கள் எனவும் கூறிய பா.ரஞ்சித், தான் பேசும் அரசியல், தன்னிடம் பலரை கொண்டு வந்து சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.