

நேற்று மாலை தலைநகர் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரபதி பவனில் , அவரது தலைமையில் நாட்டின் மிகவும் உயரிய குடிமை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவின் தொடர்ச்சியாக இரண்டாவது முறை நடைபெற்றது. இந்த விழாவில் கலைத்துறை , விளையாட்டுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 65 பேருக்கு பத்ம விபூஷன், பத்மபூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா , சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மலையாள நடிகர் மம்முட்டி , பான் இந்தியா நடிகர் மாதவன் , ஹிந்தி பின்னணி பாடகி அல்கா யாக்னிக் , திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
மலையாள நடிகர் மம்முட்டி மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் புகழ்பெற்ற நடிகராக உள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் மலையாள சினிமாவில் துணை நடிகராக அறிமுகமான அவர், பின்னர் இரண்டாம் கதாநாயகனாக வளர்ந்து இறுதியில் மலையாள திரை உலகின் முக்கிய ஆளுமையாக மாறினார். மிகவும் இயல்பான இவரது நடிப்பிற்கு தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.
இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களின் பட்டியலில் மம்முட்டிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. சிறந்த நடிகருக்காக 3 முறை தேசிய விருது பெற்றவர் என்ற பெருமையும் மம்முட்டிக்கு உண்டு. 74 வயதை கடந்த இவர் இதற்கு முன்னர் பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாட்டின் 3 வது உயரிய குடிமை விருதான பத்மபூஷன் விருதைப் பெற்றுள்ளார்.
நடிகர் மாதவன் 25 ஆண்டு காலம், திரைத் துறையில் பணியாற்றிய பங்களிப்பிற்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களை நடிகராக அறிமுகமானவர் மாதவன். அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் பரிட்சயமான நடிகரானார்.
'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இறுதியாக துரந்தர் திரைப்படத்தில் அவர் நடித்திருந்த அஜய் சன்யால் கதாபாத்திரம் அவருக்கு மேலும் புகழை பெற்றுக் கொடுத்தது.
ஹிந்தி திரை உலகின் புகழ் பெற்ற பாடகியான அல்கா யாக்னிக்கிற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. லதா மங்கேஷ்கருக்கு பின்னர் ஹிந்தி திரை உலகில் அதிக திரைப்பட பாடல்களை பாடிய பாடகியாகவும் , பாலிவுட் இசையின் பெண் முகமாக இவர் அறியப்படுகிறார். 2021 ஆம் ஆண்டில் அவரது பாடல்கள் 1700 கோடி முறை ஸ்ட்ரீம் செய்யப்பட்டு கின்னஸ் சாதனையில் இடம்பெற்றது. ஏக் தோ தீன், சோலி கே பீச்சே கியா ஹை , தால் சே தாளமிலா போன்ற மிகவும் புகழ்பெற்ற பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
முன்னாள் டென்னிஸ் வீரரான விஜய் அமிர்தராஜ் ஹாலிவுட் மற்றும் இந்திய மொழிகளில் திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழில் இவர் ஜீன்ஸ் திரைப்படம் தேசிய அளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விளையாட்டு துறையில் அவரது சாதனைகளைப் பாராட்டி பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.