

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது இயல்பான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளார். மிகவும் நிதானமாகவும் தெளிவாகவும் கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான அமரன் திரைப்படம் ஹிட்டான நிலையில் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த மதராஸி திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. இந்த படத்தில் இவருடன் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் ரவி மோகன் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘அடி அலையே’, ‘ரத்னமாலா’ பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா கடந்த 3-ம்தேதி சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கிடையே படத்தின் டிரெய்லர் நேற்று மாலையில் (ஜனவரி 4-ம்தேதி) வெளியிடப்பட்டது. 1964-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி பராசக்தி திரைப்படம் தயாராகி இருக்கிறது. 3.17 நிமிடங்கள் ஓடும் பராசக்தி டிரெய்லரில், இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் சிவகார்த்திகேயன், ரவி மோகன் ஆகியோர் எதிரெதிர் அணிகளில் நின்று கொண்டு மோதுவதை காட்டுகிறது.
இந்தி எதிர்ப்பு போராட்டம், அதற்கு இடையே காதல், ரவி மோகனின் வில்லத்தனம் என படத்தின் காட்சிகளும் வசனங்களும் ஈர்க்கும் வகையில் உள்ளன. டிரெய்லரில் வெளியான ‘செந்தமிழை காக்க பெரும் சேனை ஒன்று உண்டு‘, ‘டெல்லிதான் இந்தியாவா’ ‘எங்களுக்கு இந்தி திணிப்புதான் எதிரியே தவிர, இந்தி மொழியோ, அதைப்பேசும் மக்களோ கிடையாது’ போன்ற வசனங்கள் கவனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன.10-ம்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
1964 இல் தொடங்கும் இந்த டிரெய்லர், சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா நடித்த கதாபாத்திரங்களின் சீரற்ற வாழ்க்கையைப் பற்றிய காட்சிகளை வழங்குகிறது. இருப்பினும், "நாடு முழுவதும் இந்தியை ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக அமல்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டவுடன்" விஷயங்கள் மாறும்.
3 நிமிடங்கள் ஓடும் இந்த டிரெய்லர், மெதுவாகத் தொடங்கி இறுதியில் அதிவேக ஆக்ஷன் மற்றும் அதிரடி அரசியல் வசனங்களால் ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தில் மாநில உரிமைகள் மற்றும் இந்தி ஆதிக்க எதிர்ப்பு ஆகியவை மிக வலுவாகப் பேசப்பட்டுள்ளன. குறிப்பாக, “நாங்கள் இந்தி திணிப்புக்குத்தான் எதிரானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு அல்ல” என்ற வசனம் தமிழக அரசியலின் நீண்டகால நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், டிரெய்லரின் இறுதியில் சிவகார்த்திகேயன் ஆவேசமாக கேட்கும் “டெல்லி மட்டும்தான் இந்தியாவா?” என்ற வசனம் ரசிகர்களுக்கு 'கூஸ்பம்ப்ஸ்' (Goosebumps) ரகமாக அமைந்துள்ளது.
இந்த டிரெய்லரின் மிகப்பெரிய ஆச்சரியமாக, பேரறிஞர் அண்ணாவின் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. நடிகர் சேத்தன் அண்ணா கதாபாத்திரத்தில் மிகத் தத்ரூபமாகத் தோன்றுகிறார்.