சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த விஜய T. ராஜேந்தர் மீண்டும் தனது அடுக்கு மொழி வசனங்களுடன் மேடை ஏறி இருக்கிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தனது மகன் சிம்பு நடிக்கும் ”பத்து தல” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தான் நீண்ட இடைவெளிக்கு பின்பு பேச வந்திருந்தார் டி. ஆர். பத்து தல படத்தை ஓபிளி கிருஷ்ணா இயக்குகிறார். ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார்.
டி.ஆர் சாதாரணமாகவே மேடையில் அதிரடியாக பேசுவார்.தனது மகன் படம் என்றால் கேட்கவா வேண்டும்.அடுக்கு மொழி வசனத்தில் அரங்கை அதிர செய்தார். "மனைவி சொல்லே மந்திரம், அதையும் மீறி பேசுவது என் தந்திரம் என்று தன் மனைவி உஷா மேடையில் பேச வேண்டாம் என்று சொன்னதை அடுக்கு மொழியில் பேசி அசத்தி விட்டார். சிம்பு, ரஹ்மான் என அனைவருக்கும் அடுக்கு மொழி வசனத்திலேயே வாழ்த்து தெரிவித்தார்.
"நான் முன்பு எமோஷனலாக பேசுவேன். இங்கே தட்டி கொடுக்கறதுக்கு ஆள் இல்லை. தட்டி விட நிறைய பேர் இருக்காங்க. என்னை நான் காப்பாத்திக்கவும், எனக்கு நானே உற்சாக படுத்திக்கவும் கொஞ்சம் எமோஷனலாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆன்மீக தேடலும் இதன் தொடர்ச்சிதான். இப்போ நான் அமைதியா இருக்கேன். எனக்கு வாழ்க்கை துணை கூட கிடையாது. என் துணை எப்போதும் ரசிகர்கள்தான்". என்று செண்டிமெண்டாக பேசினார் சிம்பு.
எப்போதும் சிம்பு படங்களுக்கு வாலன் டியராக ப்ரோமோஷன் செய்யும் கூல் சுரேஷ் இந்த விழாவிற்கு திருமண வீட்டிற்கு வருவது போல வேஷ்டி சட்டையுடன் வந்திருந்தார். ஆனாலும் மேடை ஏறி சிம்புவை வாழ்த்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை வருத்தத்துடன் மீடியா முன் பகிர்ந்து கொண்டார்.ரஹ்மானும், அவரது மகனும் பத்து தல படத்தின் பாடலை பாடினார்கள். "என் மகன் நான் அழைத்தால் எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டார் இன்று என்னுடன் வந்து பாடி இருக்கிறார் என்றால் சிம்பு தான் காரணம் "என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். சிம்பு சார் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் இனி நடப்பது நல்லவையாக இருக்க வாழ்த்துக்கள்.