
நடிகர் விஜயின் அரசியல் வருகையை தமிழ்நாடு மக்கள் வரவேற்கின்றனர் என்று கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சிவராஜ் குமார் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருப்பது, நடிகர் விஜய் மிகச் சிறந்த திறமை கொண்டவர்.
அவருடைய நடிப்பு எனக்கு பிடிக்கும், எனது 100வது படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்து கொண்டார். அவர் நடிப்பு, தோற்றம், பேச்சு, செயல்பாடு என்ற அனைத்திலும் திறமையை வளர்த்துக் கொண்டவர். கடினமான உழைப்பாளி. தன்னுடைய தொடர் போராட்டத்தின் விளைவாக இத்தனை பெரிய நிலையை எட்டி இருக்கிறார். அவர் ஒரே நாள் இரவில் இந்த அளவிற்கு உயர்ந்துவிடவில்லை.
மேலும் நடிகர் விஜயின் நடிப்பை தாண்டி அவர் கல்விக்காக ஆற்றும் பணி எனக்கு பிடிக்கும். அதை பல வீடியோக்களில் பார்த்து இருக்கிறேன். கல்விக்காக உதவுவது மிகவும் சிறப்பான செயல்பாடு. விஜய்க்கு அரசியல் பார்வை இருக்கிறது. நடிகர் விஜய் மக்களை நம்புகிறார், மக்கள் நடிகர் விஜய் நம்புகிறார்கள்.
ஆனால் இயல்பாகவே ஒரு கருத்து இருக்கிறது திரைக்கவிஞர்கள் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என்று, இது நாடு முழுவதுமே நடிகர்கள் அரசியலுக்கு வரும்பொழுது பெரிய அளவில் பேசுபொருளாக இருக்கும். ஆனால் நடிகர் விஜய் விஷயத்தில் அது மாறாக இருக்கிறது. நடிகர் விஜயின் அரசியல் வருகையை மக்களே வரவேற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.