டிராகன் படம்
Dragon film

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் இதுதான்: மாஸாக வெளியான டைட்டில்!

Published on

‘லவ் டுடே' படம் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

2019ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே பெயர் சொல்லும் படமாக மாஸ் ஹிட் கொடுத்தது. அடுத்து 2022ம் ‘லவ் டுடே’ என்ற படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தானே ஹீரோவாக அந்தப் படத்தில் அறிமுகமானார்.

‘கோமாளி’ படத்தின் இயக்குநர் என்றதும், ‘லவ் டுடே’ படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாகவே இருந்தது. கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் வெளியாகி இளசுகளின் மத்தியில் கொண்டாடப்பட்டது. இன்றைய தலைமுறையினரின் காதல் கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. படத்தில் பிரதீப்பின் நடிப்புக்கு ரசிகர்கள் குவிந்தனர். இயக்கிய இரண்டு படங்களுமே ஹிட் கொடுத்த நிலையில், பிரதீப் ரங்கநாதனுக்கு மவுசு திரையுலகில் அதிகரிக்கத் தொடங்கியது.

தொடர்ந்து தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை, அசோக்செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். மேலும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி சுரேஷ் தயாரிக்கின்றனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி இருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கு, ‘டிராகன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி பட்டனை அமுக்க அனல் பறக்கும் நெருப்புக்கு மத்தியில் டைட்டில் வெளியானது. இந்த டைட்டிலே மாஸ் கிளப்பியுள்ள நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பு குவிந்துள்ளது. ஏற்கெனவே ‘லவ் டுடே’ படம் மூலம், ‘2 கே’ ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நிலையில், இந்தப் படமும் ஹிட்டடிக்கும் என்ற எதிர்பார்ப்பு குவிந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com