
2019-ம் ஆண்டு வெளிவந்த 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு 'லவ் டுடே' படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்திருந்தார். ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அதற்கு பின் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியதுடன் மாபெரும் வெற்றியும் பெற்றார். இவர் இயக்கிய நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்ததுடன், இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை விட ஹீரோ பிரதீப்பை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த படத்தில் அவரின் நடிப்பு மற்றும் டயலாக் டெலிவரி போன்றவை இளம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இந்தாண்டு பிப்ரவரி மாதம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமில்லாமல் தனுஷ் தயாரிப்பில் வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தையும் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தது.
அதுமட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்லலாம். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தை பிரதீப் ரங்கநாதன் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது. இதனிடையே சுதா கொங்கராவின் உதவி இயக்குனரான கீர்த்திவாசன் இயக்கத்தில் ‘டூட்’ (DUDE) படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். தீபாவளி வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
லவ் டுடே படத்திற்கு பின் வேறு எந்த படத்தையும் இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த பிரதீப் ரங்கநாதன் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் பாணியில் இப்படத்தின் திரைக்கதையினை எழுதி முடித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். தற்போது கையில் உள்ள படத்தின் பணிகளை முடிந்துவிட்டு, இந்த படத்திற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மூன்றாவது முறையாக பிரதீப்புடன் ஏஜிஎஸ் நிறுவனம் கூட்டணி போட இருக்கிறது. இந்த கூட்டணியில் உருவான ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரு படங்களும் சூப்பர் ஹிட்டானதால் மூன்றாவது முறையாக ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் பிரதீப் படத்தை இயக்க உள்ளனர்.
மூன்றாவது முறையாக ஏஜிஎஸ் நிறுவனத்துடன் பிரதீப் இணைய உள்ளதால் ஹட்ரிக் வெற்றி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி உள்ளது.