அமீர் - ஞானவேல்ராஜா
அமீர் - ஞானவேல்ராஜா

வெடித்த அமீர் பிரச்சனை.. வருத்தம் தெரிவித்த ஞானவேல்ராஜா!

இயக்குனர் அமீர் குறித்து பேசிய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வருத்தம் தெரிவித்துள்ளார்.

அமீர் இயக்கத்தில் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தற்போது பருத்திவீரன் படத்தை பற்றிய சர்ச்சைகள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

அப்படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கும், இயக்குனர் அமீருக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்த மோதல் நீதிமன்றத்தில் வழக்கு போடும் வரை சென்றது. தற்போதும் இந்த வழக்கு நடைபெற்று தான் வருகின்றது. இது ஒருபக்கம் இருக்க தற்போது இந்த பிரச்சனை மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

அதற்கு ஞானவேல் ராஜா கொடுத்த பேட்டி ஒரு முக்கிய காரணம் எனலாம். அந்த பேட்டியில் அமீரின் மீது ஞானவேல் ராஜா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும், அமீருக்கு ஆதரவாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், சுதா கோங்கரா, கரு.பழனியப்பன் ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட ஞானவேல்ராஜா, பருத்திவீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன்.குடும்பத்துடன் நெருங்கி பழகியவன்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். என்னை வாழ வைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com