வைஜெயந்திமாலா பாலி: இந்தியாவின் பெருமை மிகு அடையாளம்!

Padma Vibhushan Awardee vyjayanthimala
Padma Vibhushan Awardee vyjayanthimala

வைஜெயந்தி மாலா அவர்களுக்கு இந்த ஆண்டு  பத்ம விபூஷன் விருது வழங்கி இந்திய அரசு கௌரவிக்க உள்ளது.

இவர் 1933 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மகாணத்தின் திருவல்லிக்கேணியில் பிறந்தவர். தந்தையின் பெயர் N. ராமன்,தாய்  வசுந்தரா தேவி. வசுந்தரா தேவி அவர்கள் 1940களில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குடும்பம் கலை துறையில் இருந்ததால் வைஜெயந்தி அவர்களுக்கு இயல்பாகவே இசை, நடனம், நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. புகழ் பெற்ற நடன ஆசிரியர் வழுவூர் ராமையா பிள்ளை குரு குலத்தில் நடனம் கற்றுக்கொண்டார் வைஜெயந்திமாலா.

சிவராஜ் அய்யர் அவர்களிடம் முறைப்படி கர்நாடக இசையும் கற்றுக்கொண்டார் 1950 -60  காலகட்டத்தில்  தென்னிந்தியாவில் இருந்து சென்று  ஹிந்தி மொழி படங்களில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. வைஜெயந்தி அவர்கள் இந்திய சினிமாவில் வடக்கு தெற்கு என்ற போக்கை மாற்றியவர் என்று கூட சொல்லலாம். தமிழ் நாட்டில் இருந்து முதன் முதலில் ஹிந்தி திரைப்பட உலகிற்கு சென்று இந்திய திரைப்பட உலகை திரும்பி பார்க்க வைத்தவர் வைஜெயந்திமாலாதான்.

மது மதி, அமர் பாலி, நாகின், தேவ்தாஸ் உடப்பட பல்வேறு  ஹிந்தி  படங்களில் இன்றளவும் பாலிவுட்டில் பேசப்படும் படங்களாக உள்ளன. வைஜெயந்தி மாலா அவர்கள் தமிழில் மிக குறைவான எண்ணிக்கை படங்களில் தான் நடித்துள்ளார்.வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்பு திரை, சித்தூர் ராணி பத்மினி, தேன் நிலவு, மர்ம வீரன் போன்ற படங்கள் இவர் நடித்து குறிப்பிட்டு சொல்லும் தமிழ் படங்களாக இருக்கின்றன. வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் இடம் பெறும்  வைஜெயந்தி அவர்களும் பத்மினி அவர்களும் இணைந்து  ஆடும்  கண்ணும் கண்ணும் கலந்து பாடல் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக மிக சிறந்த போட்டி நடன பாடலாக உள்ளது.

பாடலில் நடுவில் வீரப்பா சொல்லும் 'சபாஷ் சரியான போட்டி'என்ற வசனத்தை பலர் பல இடங்களில் சொல்லிகொண்டு இருக்கிறார்கள்.                               வைஜெயந்தி அவர்கள் சமன்லால் பாலி அவர்களை 1968 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்பதில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி மீது தீவிர அன்பு கொண்டவர் வைஜெயந்தி அவர்கள். இதனால் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார் 1989 ஆம் ஆண்டு தேர்தலில்  தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

1993 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.1999 ஆண்டிலிருந்து இவர் பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.2007 ஆம் ஆண்டு தனது சுய சரிதை  நூலை வெளியிட்டார்.          கலை, சினிமா, அரசியல் போன்ற துறைகளில் வைஜெயந்தி அவர்களின் பங்களிப்பை போற்றும் வகையில் பத்மஸ்ரீ விருதை வழங்கி இந்திய அரசு சிறப்பித்தது. தற்போது இந்த ஆண்டு பத்ம விபூஷன் விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. சினிமா,அரசியல் என்பதையும் தாண்டி பல பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை சுடராக விளங்குபவர் வைஜெயந்தி மாலா பாலி அவர்கள். இவர் இன்னும் பல விருதுகளை பெற வாழ்த்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com