இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற நாவல் திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அதீத எதிர்பார்ப்புடன் இன்று வெளியானது. படத்தை பார்த்த பலரும் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்த நிலையில் இரண்டாம் பாகம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பல்வேறு புதிர்களுக்கு இரண்டாம் பாகம் விடை கொடுத்துள்ளது.
கடைசி சில நாட்களில் பொன்னியின் செல்வன் 2 திரைப்பட நடிகர்கள், நடிகைகள் இந்தியா முழுவதும் பயணம் செய்து படத்தை ப்ரமோட் செய்தனர்.
இந்த திரைப்படத்திற்கு நள்ளிரவு காட்சிகள் சிறப்பு காட்சிகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணி முதல் திரையிடப்பட்டது. மால்கள் மற்றும் திரையரங்குகளில் இந்த படம் திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தை பார்த்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று நாவலை திரைப்படமாக உருவாக்க மிகப்பெரிய தேடல்கள் தேவை. அதை இயக்குனர் மணி ரத்னம் மிக சரியாக கையாண்டுள்ளார் என்கின்றனர் திரை ரசிகர்கள்..!
சென்னை காசி திரையரங்கம் மற்றும் ரோகிணி திரையரங்கம் ஆகியவற்றில் காலை முதலே ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடத் தொடங்கினர். ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள காசி திரையரங்கில் நடிகர் கார்த்தி நேரில் வந்து ரசிகர்களுடன் திரைப்படத்தை பார்த்தார். அவர் வருவதையொட்டி ரசிகர்கள் சார்பாக பெரிய அளவிலான கட்டவுட் வைக்கப்பட்டு பாலபிஷேகம் செய்யப்பட்டது. முழு திரைப்படத்தையும் ரசிகர்களுடன் திரையரங்கில் உட்கார்ந்து பார்த்த நடிகர் கார்த்தி " காலத்திற்கும் அழியாத படத்தில் நானும் பணியாற்றி உள்ளேன் என்பது பெருமையாக இருக்கிறது" என்றார்.