பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கான புரோமோஷன் வேலைகளை தொடங்கிய படக்குழு படம் தொடர்பான புரோமோக்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடலின் லிரிக் வீடியோ கடந்த மார்ச் 20 ஆம் தேதிமாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.
வந்தியத் தேவனுக்கும், குந்தவைக்கும் இடையேயான காதலை மையமாக வைத்து வெளியான அந்த பாடலின் லிரிக்கல் வீடியோ மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவும் மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு அரங்கில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், பாரதிராஜா, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு வெளியிட்ட படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து வீரா ராஜ வீர, சிவோஹம் போன்ற பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகின. அதன் பிறகு Ps2 - Anthem இன்று வெளியாகியுள்ளது . இந்த நிலையில் வரும் நாட்களில் படத்தின் புரோமோஷனுக்காக படக்குழு செல்ல இருக்கும் நகரங்கள், தேதிகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் படி இன்றைய தினம் (ஏப்ரல் 15 -2023) சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் மக்களை சந்திக்கும் பொன்னியின் செல்வன் படக்குழு (ஏப்ரல் 16 -2023) அன்று கோயம்புத்தூருக்கும், (ஏப்ரல் 17 -2023) அன்று மீண்டும்சென்னைக்கும் ( ஏப்ரல் 18 -2023) அன்று டெல்லிக்கும், (ஏப்ரல் 20 -2023) அன்றுகொச்சினுக்கும், (ஏப்ரல் 22 - 2023) அன்று பெங்களூருக்கும், (ஏப்ரல் 23 -2023) ஹைதராபாத்திற்கும், (ஏப்ரல் 24, 25 -2023) அன்று மும்பைக்கும், ஏப்ரல் 26 -2023 அன்று திருச்சிக்கும், ஏப்ரல் 27 -2023 அன்று மீண்டும் சென்னைக்கும்பயணப்பட இருக்கிறது.