தெலுங்கு படங்கள் தற்போது அனைத்து தரப்பு மக்களையும் ஈர்த்து வருகிறது. நான் ஈ, மகதீரா, பாகுபலி, புஷ்பா போன்ற படங்கள் பளாக் பஸ்டரை கொடுத்தது. இப்போது புஷ்பா படத்திற்காக சிறந்த நாயகன் என்ற தேசிய விருதை அல்லு அர்ஜுன் பெறுகிறார். இதில் என்ன சிறப்பான விஷயம் என்றால் தெலுங்கு சினிமாவில் தேசிய விருது பெறும் முதல் நடிகர் இவர்தானாம். எனவே அல்லு அர்ஜுன் மீது ரசிகர்களின் பார்வை அதிகம் இப்போது உள்ளது.
சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு ரூ. 170 முதல் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் தயாராகி வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் என பல முன்னணி நடிகர்களும் அட்டகாசமாக நடித்திருந்தனர். இதில் வரும் ஸ்ரீவல்லி பாடலை சித்ஸ்ரீராம் பாடியிருப்பார். இந்த பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டானது. மேலும் இந்த படத்தில் வரும் ஊ சொல்றியா மாமா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது. இந்த ஒரு பாடலில் மட்டும் சமந்தா நடனமாடி அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். 5 மொழிகளில் வெளியான இந்த பாடல் பலரையும் ரசிக்க செய்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
பேன் இந்தியா படமாக புஷ்பா முதல் பாகம் உலகளவில் ஹிட்டானது. இந்த படத்தின் 2ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்த நிலையில் தற்போது சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. புஷ்பா 2ம் பாகம் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும், இப்படம் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகிவிடும் என அறிவிப்பு வந்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் குதித்து வருகின்றனர்.