தாமதமாகும் ‘புஷ்பா 2’ ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

Pushpa 2
Pushpa 2

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரூல்.’ இந்தப் படம் 170 முதல் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 360 முதல் 373 கோடி வரை வசூல் செய்தது. இந்தப் படத்தில் வரும் ஸ்ரீவள்ளி பாடலின் அல்லு அர்ஜுன் நடனம் உலகம் முழுவதும் பிரபலமானது. அதேபோல், சமந்தா ஆடிய படத்தின் தொடக்கப் பாடலும் பல சர்ச்சைகளுக்கு நடுவிலும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. ‘புஷ்பா’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதன் அடுத்த பாகத்தின் எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முத்தம் செட்டி மீடியா தயாரித்துள்ள, 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தை ஆகஸ்ட் 15, 2024 அன்று வெளியிடத் திட்டமிட்டிருந்தது. சந்தனக் கடத்தல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் முதல் பாகம், ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளது. அதேபோல், அல்லு அர்ஜுனும் இப்படத்திற்காக விருதுகளை வாங்கினார்.

முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பா எப்படி, பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புகிறான் என்பது காட்டப்பட்டது. இரண்டாம் பாகத்தில், தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் எதிர்த்து எப்படிக் காப்பாற்றப்போகிறான் என்பது படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் நிறைந்து இருக்க, சமந்தா நடனமாடிய, ‘ஊ அண்டவா’ பாடலும் ரசிகர்கள் தியேட்டரில் குவிய முக்கியக் காரணமாக அமைந்தது. இரண்டாம் பாகத்திலும் அத்தகைய பாடலொன்று இருப்பதாக இசையமைப்பாளர் ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முதல் பாகம் தெலுங்கை தொடர்ந்து இந்தியிலும் பிரம்மாண்ட வெற்றி கண்டது. இதனால், இரண்டாம் பாகத்திற்கு இந்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுவதை கருத்தில் கொண்டு, சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் இசை உரிமையை டி-சீரிஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கும், ஒடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளது. தெலுங்கு சாட்டிலைட் உரிமையை ஸ்டார் மா நிறுவனம் பிரம்மாண்ட விலைக்கு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தி டப்பிங் ரைட்ஸ் உரிமை மட்டும் 300 கோடி ரூபாய்க்கு கைமாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இதனைத் தொடர்ந்து, ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது. இந்தப் பாடலை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் ரீல்ஸ் செய்து வருகின்றனர். தொடர்ந்து வெளியான இரண்டாவது பாடலான 'Soodaana (The Couple Song)' என்ற பாடலும் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த நிலையில், வரும் டிசம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் ‘புஷ்பா 2’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆகஸ்ட் 15 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் இன்னும் நிறைவடையாததால் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com