

விஜய் ஆண்டனி மற்றும் ஸ்வாஸிகா நடிப்பில் உருவாகியுள்ள நூறு சாமி திரைப்படம்,ஜூன் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த திரைப்படத்தை சசி இயக்கியுள்ளார் , விஜய் ஆண்டனி இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இயக்குனர் சசி – விஜய் ஆண்டனி கூட்டணி பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பின் மீண்டும் இணைந்துள்ளது. நேற்று மாலை இந்த திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் ஷோ சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் , இயக்குனர் சசி தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு ஆதரவாக இருந்தார், என்பதை மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசினார். நான் உதவி இயக்குனராக இருந்து பட வாய்ப்புகளைத் தேடி காத்திருந்த காலகட்டம் அது. சசி எனக்கு முன்பாகவே இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்றவர்.
ஒரு நாள் எதேச்சையாக ஏவிஎம் ஸ்டுடியோவில் அவரை சந்தித்தேன். அப்போது நான் தனியாக படம் எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்ற செய்தியை அவரிடம் கூறினேன். என்னை வாழ்த்தி பாராட்டி விட்டு வண்டியில் சென்றவர், சிறிது தூரத்தில் திடீரென்று வண்டியை நிறுத்தினார் , நான் அவரது அருகில் சென்றேன்.
அப்போது சசி "நீ வேலையை விட்டுவிட்டு இயக்குனர் வாய்ப்பை தேடிக் கொண்டிருக்கிறாய். ஆனால், எந்த சூழலிலும் பசியோடு மட்டும் இருந்து விடாதே! உனக்கு எப்போது பண தேவை இருந்தாலும் தயங்காமல் என்னிடம் கேள், நான் உதவி செய்கிறேன்" என்றார். இந்த வார்த்தைகள் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
நான் அவரிடம் சென்று உதவி கேட்டேனோ? இல்லையோ! ஆனால் ,பசியால் வாடும் ஒரு மனிதருக்கு உதவ இன்னொரு மனிதர் இருக்கிறார் என்ற எண்ணம் எனக்குள் பெரிய தைரியத்தை கொடுத்தது. அந்த தைரியம் தான் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது.
என்னுடைய முதல் திரைப்படமான தீனாவின் படப்பிடிப்பு அப்போதுதான் தொடங்கி இருந்தது. படப்பிடிப்புகள் 2 நாட்கள் மட்டும் நிறைவடைந்த நிலையில் ,இந்த படத்தினை அப்படியே கைவிட்டு விடலாமா? என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. எனக்குள் ஏராளமான மன குழப்பங்கள் இருந்தன. நான் மிகவும் குழம்பியிருந்த அந்த நிலையில் ஏதேச்சையாக மீண்டும் நான் சசியை சந்தித்தேன்.
அப்போதும் சசி வழக்கம் போல எனக்கு வாழ்த்து தெரிவித்தார். நான் அவரிடம் "இந்த படம் என்னால் எடுக்க முடியாது என்பதை போல் சூழல் உள்ளது, அதிலிருந்து விலகிவிடலாம்" என்று நான் நினைப்பதாக கூறினேன். ஆனால் , சசி "ஒரு திரைப்படத்தை ஆரம்பித்துவிட்டு பாதியில் வெளியேறினால், அது ஒரு தோல்வி படத்தை கொடுத்ததற்கு சமமாகும். அதனால் கிடைக்கும் பெயரை உன்னால் மாற்ற முடியாது.
நாம் நினைத்தபடி 100% ஒரு காட்சி அமைந்து விடாது. நாம் நினைத்ததில் 70% வந்தாலே போதுமானது , மீதியுள்ள 30% ரசிகர்கள் தானாக புரிந்து கொண்டு முழுமையான வெற்றியாக மாற்றி விடுவார்கள்", என்று அவர் கூறினார். சசியின் இந்த வார்த்தைகள் எனக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்தது அதன் பின்னர் தீனா படத்தை முழுமூச்சோடு வேலை செய்து முடித்தேன்.
இன்று நான் இந்த நிலைக்கு வர காரணமே நண்பன் சசி தான் என்று ஏ.ஆர்.முருகதாஸ் பேசியிருந்தார். அத்துடன் நூறு சாமி திரைப்படம் வெற்றி பெறுவதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். தீனா படத்தை 2 நாளில் நிறுத்தும் அளவிற்கு முருகதாஸிற்கு என்ன பிரச்சனை இருந்தது? அவரை அந்த மனநிலைக்கு தள்ளியது யார்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.