திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா? அல்லது அண்ணாமலை இயக்கமா? ராகவா லாரன்ஸ் எடுக்கும் முடிவு என்ன?

Lawrence and vijay
Ragava lawrance and His mother Ragava lawrance
Updated on

திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக, கடந்த சில நாட்களாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று, திமுகவின் முந்தைய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரு இடங்களிலும் வெற்றி பெற்றார். ஒருவருக்கு ஒரு அரசியல் அதிகாரப் பதவி சட்டப்படி, திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை விஜய் ராஜினாமா செய்ததால், அங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தவெகவில் பலத்த போட்டி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் கு.ப. கிருஷ்ணனுக்கு வாய்ப்பளிக்கலாம் என்ற தகவல் முதலில் வெளியானது. தற்போது இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு லாரன்ஸின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது.

காஞ்சனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர் ராகவா லாரன்ஸ். ஆரம்ப கால கட்டத்தில் பிரபுதேவாவின் நடன குழுவில் ஒருவராக இருந்தவர், பிற்காலங்களில் நடன இயக்குனராகவும் மாறினார். பிரபுதேவாவின் பாணியை பின்பற்றி திரைப்பட பாடல்களில் லாரன்ஸ் தலைகாட்டி வந்தார். பின்னர் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றி வந்தார்.

அற்புதம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவர் அறிமுகமானார். ஆனாலும் அந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெறவில்லை. ராகவா லாரன்ஸ் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் பணியாற்றிய முனி திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு காஞ்சனா திரைப்படமும், அதன் தொடர்ச்சியும் லாரன்ஸை ரசிகர்களின் மனதில் நிலை நிறுத்தியது.

நடிகராக மட்டுமின்றி, நீண்ட காலமாக சமூக சேவகராகவும் ராகவா லாரன்ஸ் பணியாற்றி வருகிறார். தனது திரைப்படங்கள் மற்றும் பொதுவெளியில் எப்போதும் தன்னை ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகவே காட்டிக் கொண்டிருப்பார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தபோது , அதில் இணைவதில் பெரிய ஆர்வம் காட்டி வந்தவர் லாரன்ஸ்.

ரஜினிக்கு ஆதரவாக பொதுவெளியில் மேடைகளிலும் வெளிப்படையாக பேசி வந்தார். ரஜினி மீதான விமர்சனங்களுக்கும் அவர் பதிலடி கொடுத்து வந்தார். லாரன்ஸ் தற்போது விஜய் மட்டுமே சினிமா துறையில் தனக்கு இருக்கும் ஒரே நண்பர் என்று கூறியுள்ளார். விஜய் பற்றியும் புகழ்ந்து பேசிக் கொண்டு வருகிறார்.

தனது X பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி "திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து தொடர்பு கொண்டு என்னிடம் விளக்கம் கேட்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.

என் தாயாரின் ஆசியுடன் , என் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவு குறித்த, அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் 11-ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் , #Matram,#Service is God" என்று பதிவிட்டுள்ளார். லாரன்ஸ் குறிப்பிட்ட மாற்றம் அண்ணாமலை இயக்கத்தின் குறிக்கோளாக உள்ளது. இதனால், அண்ணாமலை இயக்கத்தில் சேர உள்ளாரா? என்ற குழப்பம் நிலவுகிறது.

logo
Kalki Online
kalkionline.com