சொந்த வீட்டை இலவச பள்ளியாக மாற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் முடிவு..!

Raghava Lawrence
Raghava Lawrence
Published on

நடிகரும் தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence), தனது முதல் வீட்டை, 'காஞ்சனா 4' படத்திற்காக கிடைத்த அட்வான்ஸ் தொகையைக் கொண்டு, ஏழை குழந்தைகளுக்கு இலவச பள்ளியாக மாற்றியுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடனக் கலைஞராக இருந்து படிப்படியாக நடன இயக்குநராக உயர்ந்தார். 'முனி' திரைப்படம் அவரை இயக்குநராகவும் நடிகராகவும் உருவாக்கியது. அதன் தொடர்ச்சியாக 'காஞ்சனா' வரிசைப் படங்கள் பெரும் வெற்றி பெற்று, அவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்த்தின. பேய் மற்றும் அதிரடிப் படங்களில் கவனம் செலுத்திய லாரன்ஸ், தனது தனித்துவமான நடன அசைவுகளுக்கும் பெயர் பெற்றவர். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ், தனது கடின உழைப்பாலும் சமூகப் பணிகளாலும் மக்களிடையே பரவலாக அறியப்படுகிறார்.

சமூக பணிகளின் ஒருகட்டமாக ராகவா லாரன்ஸ் தனது முதல் வீட்டை இலவச பள்ளியாக அமைக்கவிருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் தனது முதல் வீட்டை, தான் நடன மாஸ்டராக இருந்தபோது சம்பாதித்த பணத்தில் வாங்கினார். அந்த வீட்டை பின்னர் அனாதை இல்லமாக மாற்றி, தனது குடும்பத்துடன் வாடகை வீட்டிற்குச் சென்றார்.

இப்போது அதே வீட்டை, குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் பள்ளியாக மாற்றியுள்ளார். இந்தப் பள்ளியின் முதல் ஆசிரியராக, ராகவா லாரன்ஸின் அனாதை இல்லத்தில் வளர்ந்து, தற்போது படித்து முடித்து, சமூகத்திற்கு சேவை செய்ய தயாராக இருக்கும் ஒருவரை நியமிக்க இருக்கிறார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் பெருமையான தருணம் என்று ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
அரசின் அடுத்த "தீபாவளி பரிசு"..! இனி பிஎஃப் பணத்தை ஏ.டி.எம்-மிலேயே எடுக்கலாம்..!
Raghava Lawrence

சமூக சேவை என்பது லாரன்ஸுக்குப் புதிதல்ல. கடந்த வாரம், ரயில்களில் இனிப்பு விற்று பிழைப்பு நடத்தும் ஒரு முதிய தம்பதியைப் பற்றி அறிந்த அவர், அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். அவர்களின் தொடர்பு விவரங்கள் தெரியாததால், அவர்களைப் பற்றி தெரிந்தவர்கள் தன்னைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

ராகவா லாரன்ஸ் தனது 'மாற்றம்' என்ற இயக்கம் மூலம் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com