சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பி.வாசுவின் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ஆக் ஷன், திரில்லர் காட்சிகளைக் கொண்ட இந்தப் படம் தமிழ்நாட்டில் 200 நாட்கள் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று சாதனைப் படைத்தது. மேலும், அதிகப்படியான வசூலை ஈட்டியதால் இந்தப் படம் நடிகர் ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
‘சந்திரமுகி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்திரமுகி இரண்டாம் பாகம் தயாரிப்புக்கான ஆலோசனைகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து, பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸுடன் கதாநாயகியாக கங்கன ராணாவத் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் ராதிகா, சிருஷ்டி ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நகைச்சுவை நடிகர் வடிவேலு இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகிவரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், இந்தப் படத்தை வரும் செப்டம்பர் மாதம் 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான, ‘ஸ்வகத்தாஞ்சலி’ எனும் பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் தற்போது தீயாகப் பரவி வருகிறது.