

நடிகர் ராகவா லாரன்ஸின், ’ருத்ரன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்குப் பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ், ’’நூற்றைம்பது குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களுக்குக் கல்வி வழங்க உள்ளேன். இந்தப் புதிய முயற்சியை வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்” என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். ராகவா லாரன்ஸ் ஏற்கெனவே அவரது அம்மாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.