

இந்திய திரையுலகம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ,தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் டீஸர் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு 'வாரணாசி ' என்ற பெயர் சூட்டப்பட்டது. பாகுபலி சீரிஸ் மற்றும் RRR திரைப்படங்களின் மிகப்பெரிய வெற்றிகளைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்குவதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட இந்த திரைப்படத்தின் டீஸர் , வெளியான 24 மணி நேரத்திற்குள் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது இந்தியத் திரையுலகின் புதிய சாதனையாக உள்ளது. கிபி 512 ஆம் ஆண்டு தொடங்கும் திரைப்படத்தின் டீஸர் காட்சி பிரம்மாண்டத்தின் நுழைவாயிலை திறந்துள்ளது. டீஸர் காட்சிகள் சர்வதேச தரத்தில் , தொழில் நுட்பத்தின் உச்சத்தில் இருக்கிறது.
ஆரம்பத்தில் வாரணாசியில் தொடங்கும் காட்சிகள் , அப்படியே அண்டார்டிகாவில் பனிசூழ்ந்த தண்ணீரில் நனைந்து , அடுத்து வனம் மிகுந்த ஏராளமான வனவிலங்குகளை கொண்ட ஆப்பிரிக்காவிற்கு சென்று , பின்னர் இலங்கையில் இராமாயண காலத்திற்கு சென்று , மீண்டும் டீஸர் தொடங்கிய வாரணாசிக்கு வருகிறது. வாரணாசியில் மகேஷ்பாபு பெரிய காளை மாட்டில் அமர்ந்தவாறு, ஒரு கையில் திரிசூலத்தை ஏந்திக் கொண்டு , அதில் சவாரி செய்தவாறு வருகிறார்.
டீஸர் வெளியிட்டு விழாவிலும் மகேஷ்பாபு எந்திர காளையின் மீது சவாரி செய்தவாரே மேடைக்கு வருகை தந்தார். இந்த வெளியீட்டு விழாவில் மகேஷ்பாபு , மனைவி மற்றும் மகளுடன் கலந்துக் கொண்டார்.டீஸர் காட்சிகள் வெளியாகி தொடர்ச்சியாக அதிகப் பார்வைகளை பெற்று வருகின்றன. படத்தின் டீஸர் பல்வேறு காலக் கட்டங்களில் , பல்வேறு இடங்களுக்கு பயணிக்கிறது.அதனால் , படத்தின் திரைக்கதையில் பல்வேறு சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று நம்பலாம்.
இந்த திரைக்கதையில் இராமாயணத்தின் குறிப்பிட்ட பகுதிகளும் இருப்பதாக இயக்குனர் ராஜமௌலி கூறியுள்ளார். இந்த திரைப்படத்தில் ருத்ரனாக நடிக்கும் மகேஷ் பாபுவுடன் , மந்தாகினியாக பிரியங்கா சோப்ராவும் , வில்லன் கதாபாத்திரத்தில் கும்பாவாக பிருத்விராஜ்ஜும் நடிக்கிறார்கள். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பல்வேறு தகவல்களின் படி , 'வாரணாசி' இந்திய சினிமாவின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 2000 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் உலகம் முழுவதிலும் முதன்மையாக 17 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு , சர்வதேச திரைப்படமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே , அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்யும் படமாக மாற்ற , விளம்பரக் குழுவினரும் வேலை செய்துக் கொண்டுள்ளார்கள்.
படத்தின் தரத்தில் சமரசம் செய்யக் கூடாது என்பதற்காக, இமயமலைத் தொடரின் மக்களின் பார்வைக்கு எட்டாத சவாலான பகுதிகளிலும், அமேசான் காடுகளின் மர்மமான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.மேலும் ஹாலிவுட்டின் முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோக்களும் இந்தத் திட்டத்தில் இணைந்து காட்சிகளின் தரத்தினை உயர்த்தி வருகின்றன. இந்தப் படத்தை கே.எல். நாராயணா மற்றும் எஸ்.எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரிக்கின்றனர். வாரணாசி திரைப்படம் 2027 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.