நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்த இரு துருவங்கள்: கமல் - ரஜினியை இயக்கும் சுந்தர்.சி..!

rajni kamal
rajni kamal
Published on

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினி காந்த்தும் , அவருக்கு எப்போதும் போட்டியாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து திரைப்படம் நடிக்க உள்ளதாக பரபரப்பாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.தற்போது இது பற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பை கமலின் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 4 தாசப்த காலத்திற்கு பின் ரஜினி - கமல் இணையும் , அதிக எதிர்பார்ப்பு மிக்க இந்த திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பேனர் மூலம் கமல் ஹாசன் தயாரிக்கிறார். ரஜினியின் 173வது திரைப்படமாக உருவாகவுள்ள இது இந்திய சினிமாவின் பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

1960 ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல். 1975 ஆம் ஆண்டு , கமல் நாயகனாக நடித்த அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் நடிகராக ரஜினிகாந்த் அறிமுகமாகினார். அப்போதிலிருந்து ரஜினி கமல் இடையே நல்ல நட்பு தொடங்கி 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆரம்ப கால கட்டத்தில் கமல் நாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் ரஜினிக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. 

ரஜினி - கமல் இருவரும் இணைந்து 21 திரைப்படங்களில் நடித்துள்ளனர். இதில் அபூர்வ ராகங்கள், அந்துலேனி கதா , மூன்று முடிச்சு, அவர்கள், தப்பு தாளங்கள், நினைத்தாலே இனிக்கும், தில்லு முல்லு ஆகிய 7 படங்கள் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்தவை. ரஜினி கமல்  இருவரின் வளர்ச்சியில் கே.பாலசந்தரின் பங்கு மிக அதிகம்.ரஜினி கமல் இணைந்து நடித்த படங்களில் அதிக முறை கதாநாயகியாக ஶ்ரீ பிரியா நடித்துள்ளார். அதற்கு அடுத்ததாக ஶ்ரீ தேவியும் 3 திரைப்படங்களில் நடித்துள்ளார். 

கமல் நாயகனாக நடித்த 16 வயதினிலே மற்றும் மூன்று முடிச்சு ஆகிய திரைப் படங்களில் மிரட்டும் வில்லனாக ரஜினி நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் இருவரும் வளர்ச்சிக்காக சேர்ந்து நடிப்பதை கை விட்டனர். 1985 ஆம் ஆண்டு அமிதாப் பச்சனுடன் இணைந்து இருவரும் கிராப்தார் என்ற திரைப்படத்தில் நடித்தனர். அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை. 

தற்போது ,தலைவர் 173 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தை இயக்கும் சுந்தர்.சி இதற்கு முன்னர் ரஜினி , கமல் ஆகியோரை தனித்தனியாக கதாநாயகனாக வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார். சுந்தர்.சியை பொறுத்தவரையில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக எப்போதும் இருக்கிறார். தமிழ் சினிமாவில் சுந்தர்.சியின் கிராப் எப்போதும் நடுநிலையாக ஒரே இடத்தில் இருக்கும். அதிரடியாக மேலே உயர்வதும் , தடாலடியாக கீழே இறங்குவதும் இல்லாமல் நிலையாக இருக்கிறார். 

சுந்தர். சி யின் திரைப்படங்கள் எப்போதும் நகைச்சுவையை முதன்மையாக கொண்டதாகவே இருக்கும். பெரிய வீடு , கூட்டுக் குடும்பம், குடும்ப தகராறு , காதல் , நகைச்சுவை வில்லன் , பேய் கதை என படம் முழுக்க கலகலப்பாகவே இருக்கும். இதற்கு முன்னர் ரஜினியை வைத்து அருணாச்சலம் என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.

அன்பே சிவம் என்ற திரைப்படத்தின் மூலம் கமலையும் இயக்கியுள்ளார் , இந்த திரைப்படம் சுந்தர்.சியின் வழக்கமான நகைச்சுவை பாணியில் இல்லாமல் சோகமான திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படம் தோல்வியை தழுவினாலும் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற திரைப்படம் இது. ஜெயிலர் 2 திரைப்பட படப்பிடிப்பு முடிந்த பின் அடுத்த ஆண்டு இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இந்த திரைப்படத்தை விநியோகம் செய்ய உள்ளது.

இதையும் படியுங்கள்:
500 கோடி ஆண்டுகளுக்கு பிறகு பூமி எங்கே இருக்கும் தெரியுமா? விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!
rajni kamal

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com