அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா?

அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா?

- ரஜினி வைத்த பொடி

நாலு நாள் ஓடாது என்றார்கள். நாலு வாரம் ஓடினால் ஆச்சர்யம் என்றார்கள். முதலுக்கு மோசமில்லை என்றார்கள். அத்தனை பேச்சையும் ஓரங்கட்டி --------------------------------------------------------- சைலன்டாக 25 வாரம் ஓடி விட்டது. வெள்ளி விழாப் பரபரப்பில் ம்யூஸிக் அகாடமி திணறிப்போய் விட்டது.

ரஜினி வரப் போகிறார், லண்டனிலிருந்து திரும்பியிருக்கிற இளையராஜா வரப் போகிறார் என்றதும் அகடமியின் காம்பவுண்ட் சுவரைச் சுற்றி, போக்குவரத்தைக் குலைக்கச் செய்யும் அளவுக்குக் கூட்டம் கூடிவிட்டது.

தடுப்புக் கட்டைகளும் போலீஸ் அணிவகுப்பும் வயர்லெஸ் பேச்சுக்களும் ‘இது சினிமா விழாவா, ஜெ.பங்கேற்கும் அரசியல் விழாவா’ என்னும் மகத்தான சந்தேகத்தை உண்டுபண்ணின.

கட்டின கையை எடுக்காமல் சரவணன்; பேப்பர், பேனாவை வைத்துக் கொண்டு சிந்தனை ரேகையுடன் எஸ்.பி.முத்துராமன்; பளபள டிரெஸ்ஸில் அங்குமிங்கும் நடைபயின்ற உதயகுமார்.

ஐந்தரைக்கெல்லாம் அம்மாவோடு வந்துவிட்ட சித்ரா, பத்திரிகையாளர் வரிசையின் முதல் ஸீட்டில் உட்கார்ந்து தன் பாட்டுக்குத் தானே தாளம் போட்டுக் கொண்டிருந்தார்.

பால்கனியில் ரசிகர் மன்றக் கண்மணிகள், (நன்றி வாசு) திருமதி ரஜினி உள்ளே நுழைந்ததிலிருந்து ஆரம்பித்த கைதட்டலையும் விஸிலையும் விழா முடிகிறவரை நிறுத்தவேயில்லை. ரஜினி நுழைந்ததும் கட்டுப்படுத்த முடியாத கலாட்டா, “வருங்கால முதல்வரே வாழ்க!” “வானவராயரே வாழ்க!”

“தலைவா” என்பது மாதிரி “முதல்வா” என்கிற சொல்லாடல் ரஜினி ரசிகர்களிடையே தற்சமயம் அதிகம் புழங்குவதைக் காண முடிந்த து.

சரவணன் தமது உரையில் ”ரஜினி நெடுங்காலம் சினிமாவில் இருக்க வேண்டும். வேறெங்கும் போகக் கூடாது” என்று பின்பகுதியை அழுத்திச் சொன்னதற்கு மேடையில் மட்டும் வரவேற்பு!

ரஜினியாவது தன்னிலை விளக்கம் தந்திருக்கலாம். அவர் தற்சமயம் வாயைத் திறக்கிறவராகத் தெரியவில்லை. “அரசியலுக்கு வருவேனா, மாட்டேனா” என்பது குறித்து எனது அடுத்த படத்தில் சொல்லியிருக்கிறேன்” என்பதாக ஒரு ‘பொடி’ மட்டும் வைத்தார்.

எஸ்.பி.எம். இளையராஜாவுக்கு ஏழெட்டு பக்க புகழ்மாலை சூட்ட, ரஜினி ரசிகர்கள் பொறுமையிழக்க… முணுமுணுப்பு + சலசலப்பு.

வாசு மட்டும் கொஞ்சம் கலகலப்பை உண்டு பண்ணவில்லை என்றால் ஒரு சின்ன கலாட்டா உருவாகி இருக்கலாம்.

“எத்தனையோ பேர் ரஜினியை வைத்துப் படமெடுக்கிறார்கள். நானும் தான் படமெடுக்கிறேன். ஆனால் உதயகுமாருக்கு மட்டும்தானே வித்தியாசமாகக் காட்ட வேண்டும் என்று  தோன்றியிருக்கிறது?” என்று ஜில்லென்று ஒரு ஐஸ் க்யூபை உதய்குமார் தலையில் வைத்தார்.

 முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த மீனா, அபாரமான மேக்கப்பும் அனாயாசமான புன்னகையுமாக சகலரையும் கலக்கிக் கொண்டிருந்தார். போதாக்குறைக்கு சரவணன் வாயாலேயே ‘இவர் சாவித்ரி, பத்மினி ரேஞ்சில் வருவார்’ என்கிற ஆசீர்வாதம் வேறு சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?

மகா ஆச்சர்யம், நெடுநேரம் பொறுமை காத்து இளையராஜா உட்கார்ந்திருந்தது. மைக்கில் கூப்பிட்ட போலெல்லாம் எழுந்து போய் பரிசளித்தது தவிர, மற்ற நேரமெல்லாம் ரஜினியுடன் என்னமோ ரகசியம்.

தான் இருபத்தெட்டு ஆண்டுகளாகத் தியானம் பழகுவதையும், தியான நுணுக்கம் பற்றியும் ரஜினி மைக்கில் சொன்னபோது யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

“சரி மச்சி… அண்ணாத்த ‘ட்ராக்’ மாறறாரு… நான் வரட்டா?.... என்று கூறிவிட்டு புறப்பட்டார் ஒரு ரசிகர் மன்றக் கண்மணி.

 நாலு நாள் ஓடாது என்றார்கள். நாலு வாரம் ஓடினால் ஆச்சர்யம் என்றார்கள். முதலுக்கு மோசமில்லை என்றார்கள். அத்தனை மேச்சையும் ஓரங்கட்டி ஏ.வி.எம்மின் எஜமான் சைலன்டாக 25 வாரம் ஓடிவிட்டது. வெள்ளி விழாப் பரபரப்பில் ம்யூஸிக் அகாடமி திணறிப்போய் விட்டது.

போட்டி :

1.ரஜினி அமாவாசையில் மனநலம் குறைந்தவர் போல நடித்த படம் ?

2.ரஜினி ஜோதியோடு ஜோடி சேர்ந்த படம் ?

3.ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com