ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
லால் சலாம் படத்தில் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
இதன் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. தமிழர்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு லால் சலாம் படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் 4 நாட்கள்தான் உள்ள நிலையில், நேற்று இரவு இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை. அதான் இந்த நாட்டோட அடையாளம் என்று ரஜினி பேசும் வசனம் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இதை தான் இசைவெளியீட்டு விழாவில், சங்கியாக இருப்பவர்கள் இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார்கள் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த ட்ரைலர் வெளியான 10 மணி நேரத்திலேயே அதிக பார்வையாளர்களை கடந்து யுடியூப்பில் டாப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.