ரஜினிகாந்தின் ‘டாப்’ 10 ‘ஃப்ளாப்’ படங்கள்!

ரஜினிகாந்தின் ‘டாப்’ 10 ‘ஃப்ளாப்’ படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது திரைப்படங்களின் வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டவராகவே இருந்திருக்கிறார். இன்றும் இருக்கிறார்.  அவர் நடித்த திரைப்படங்கள் தோல்வி காணலாம் – பல காரணங்களுக்காக. ஆனால், சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் அவருக்குத் தோல்வியே கிடையாது. 

நேற்று வெளியிடப்பட்டு ஜெயித்துக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர்’கூட (அவருக்கு இன்று வயது 72) இதையே உணர்த்துகிறது.

‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்ற வகையில் ரஜினிக்கும் சில பல திரைப்படங்கள் ஃப்ளாப்பாக அமைந்தன என்பது அனைவரும் அறிந்ததே. அந்த ஃப்ளாப் வரிசையில் ‘டாப்’பில் இருக்கும் 10 படங்கள் இதோ:

ராகவேந்திரா (1985)

ராகவேந்திரா
ராகவேந்திரா

ஜினிகாந்தின் நூறாவது திரைப்படமான ராகவேந்திராவில், அவர் ஒரு இந்துத் துறவி ராகவேந்திர ஸ்வாமியாக நடித்தார். இத்திரைப்படத்திற்கு ரஜினியே ஸ்கிரிப்ட் எழுதி, அவரது வழிகாட்டியான கே.பாலச்சந்தரின் கவிதாலயா ப்ரொடக்ஷன் தயாரித்தது. ஸ்ரீ ராகவேந்திரா சுவாமியின் வாழ்க்கை மற்றும் அவர் வாழ்ந்த காலங்களை முழுமையாக திரைப்படம் விவரித்திருந்தது. தன்னுடைய சிறப்பான நடிப்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருந்தும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை இத்திரைப்படம் சந்தித்தது. 

1. நான் அடிமை இல்லை (1986)

நான் அடிமை இல்லை
நான் அடிமை இல்லை

யக்குனர் துவாரகிஷ் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த திரைப்படம். வெவ்வேறு சமூக பின்னணியில் இருந்து வந்து திருமணம் செய்துகொண்ட இளம் தம்பதிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சுற்றி இத்திரைப்படம் உருவானது. கதை நன்றாக இருந்தாலும், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இத்திரைப்படத்தில் சுவாரசியம் இல்லை என்பதால் தோல்வியைச் சந்தித்தது. இத்திரைப்படம் ஸ்ரீதேவியின் தமிழ் திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

2. நாட்டுக்கு ஒரு நல்லவன் (1991)

நாட்டுக்கு ஒரு நல்லவன்
நாட்டுக்கு ஒரு நல்லவன்

ரு நேர்மையான காவலரின் வாழ்க்கை மற்றும் மாஃபியாவுக்கு எதிரான அவரது போராட்டத்தை இந்த திரைப்படம் எடுத்துரைக்கிறது. வி.ரவிச்சந்திரன் எழுதி இயக்கிய இத்திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது. தெலுங்கு பதிப்பில் நாகார்ஜுனா கதாநாயகனாக நடித்திருந்தார். இருப்பினும் இது எந்த மொழியிலும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. 

3. வள்ளி (1993)

வள்ளி
வள்ளி

ஜினிகாந்த் எழுத்தில் உருவான மற்றொரு திரைப்படம்தான் வள்ளி. பாக்ஸ் ஆபிஸில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. திரைப்படத்தின் தயாரிப்பாளராகவும் ரஜினி இருந்ததால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. வள்ளி என்ற இளம் பெண் ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு இறுதியில் அவனை அவள் எப்படி கொன்றாள் என்பதை இத்திரைப்படம் கதைக்களமாகக் கொண்டிருந்தது. 

4. பாபா (2002)

பாபா
பாபா

ஜினியின் கேரியரில், படு மோசமான தோல்வி என்றால் அது பாபாதான். இத்திரைப்படத்தால் விநியோகஸ்தர் களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பின்னாளில் ரஜினி சரி செய்தார். ரஜினி எழுதி தயாரித்து மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பாபா திரைப்படம், ஒரு நாத்திகனின் ஆன்மீக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

5. குசேலன் (2008)

குசேலன்
குசேலன்

யக்குனர் பி.வாசுவால் இயக்கப்பட்ட இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமான 'கதா பறையும் போல்' படத்தின் ரீமேக் ஆகும். ஒரு கிராமத்தில் வசிக்கும் சவரம் செய்யும் ஏழைக்கும், ஒரு சூப்பர் ஸ்டாருக்கும் இடையேயான அழகான உறவைச் சுற்றி கதைக்களம் நகரும். இத்திரைப்படத்தில் ரஜினி ஒரு கேமியோ பாத்திரத்திலேயே நடித்திருப்பார். ஆனால் சந்தைப்படுத்தும்போது இது ரஜினி திரைப்படம் எனக்கூறி சந்தைப்படுத்தியதால், திரைப்படம் வெளியானபோது அவர் திரையில் குறைவாக தோன்றியதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். 

6. லிங்கா (2014)

லிங்கா
லிங்கா

லிங்கா திரைப்படத்தில் இரு வெவ்வேறு விதமான வேடத்தில் நடித்தது ரஜினியின் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியது. ஆனால், படத்தின் கதையோடு மக்களால் ஒன்ற முடியவில்லை. மிகவும் பழமையான திரைக்கதை மற்றும் கூஸ்பம்ப்ஸ் இல்லாத காட்சிகள் போன்றவை, ரசிகர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர் களை ஏமாற்றின. எத்தகைய ஸ்டாராக இருந்தாலும் ஸ்கிரிப்ட் சரியில்லை என்றால் திரைப்படம் தோல்வியடையும் என்பதற்கான சிறந்த உதாரணமாக லிங்கா திரைப்படம் அமைந்தது. 

7. கோச்சடையான் (2014)

கோச்சடையான்
கோச்சடையான்

வித்தியாசமாக முயற்சிக்கிறோம் என்று ‘கூவப்பட்டு’ பல்பு வாங்கிய திரைப்படம் தான் கோச்சடையான். இந்திய சினிமாவின் ஒரு புதிய முயற்சியாக மோஷன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் ரஜினிகாந்த் காலடி எடுத்து வைக்க முயற்சி செய்தார். இருப்பினும் எதிர்பார்த்த அளவு திரைப்படத்தின் காட்சிகள் அமையாததால் மிகப்பெரிய பண இழப்பைச் சந்தித்தது.

8. கபாலி (2016)

கபாலி
கபாலி

ந்தத் திரைப்படத்தின் டிரைலரைப் பார்க்கும்போது, அந்த அளவுக்கு அட்டகாசமாக இருந்தது. ஆனால், திரைப்படம் சொல்லும்படி விறுவிறுப்பாக அமையவில்லை. திரைப்படத்தின் முதல் 15 நிமிடங்கள் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு படம் ஆமை வேகத்தில் செல்லும். இதனால் மிகப்பெரிய தோல்விப் படமாக இது மாறியது. 

9. அண்ணாத்த (2021)

அண்ணாத்த
அண்ணாத்த

சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம், நமது சகிப்புத்தன்மையை சீண்டிப்பார்க்கும் வகையில் அமைந்தது. முன்பு கூறிய 9 திரைப்படங்களில், ஏதாவது ஒரு காட்சியாவது, ஒரு அம்சமாவது சிறப்பாக இருக்கும். ஆனால் இத்திரைப்படத்தில் வரும் அனைத்து காட்சிகளுமே Cringe Ultra Pro Max வகையைச் சேர்ந்தவை. அண்ணன் தங்கை பாசம் என்கிற பெயரில் பார்வையாளர்களை கதறவிட்டு, பாக்ஸ் ஆஃபிஸிலும் கதறியது. 

இன்னும் சில திரைப்படங்கள்கூட வெற்றியை அடையவில்லை என்றாலும், ஒரு நடிகனாக ரஜினிகாந்தின் பயணம் ஒவ்வொரு திரைப்படத்திலும் சிறப்பாகவே இருந்தது. இத்தகைய திரைப்படங்களால் அவருடைய மார்க்கெட் இறங்குமா என்ற சந்தேகம் அவ்வப்போது எட்டிப் பார்த்தாலும்,  அவருடைய சூப்பர்ஸ்டார் அந்தஸ்து கடுகளவும் குறையவில்லை. எனவே ஒரு மனிதனின் வீழ்ச்சி, எழுச்சி என்பது வாழ்க்கையின் சாதாரணமான ஒன்று என்பதைப் புரிந்துகொண்டால், சூப்பர் ஸ்டாரின் எல்லா திரைப்படங்களும் சூப்பர் ஹிட் என்பது நமக்கு விளங்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com