

இந்திய அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். தெலுங்கி டாப் ஹீரோவான இவரது தயாரிப்பில் 'தி இந்தியன் ஹவுஸ்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
நிகில் சித்தார்த்தா மற்றும் அனுபம் கெர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவிருக்கிறது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை 'ஜோஹார்' மற்றும் 'பைரவ கீதா' போன்ற திரைப்படங்களை எழுதிய ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார்.
இப்படம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் கீழ் புதிதாக தொடங்கப்பட்ட V மெகா பிக்சர்ஸ் பேனரின் முதல் தயாரிப்பு முயற்சியாகும். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் (ஏஏஆர்ட்ஸ்) இத்திட்டத்துடன் இணைந்துள்ளார்.
இப்படத்தின் அறிவிப்பு வீடியோவைப் பார்க்கும்போது பிரமிக்க வைக்கிறது. இறுதியாக எரிந்துகொண்டிருக்கும் ஒரு வீட்டின் முன்னே நிகில் சித்தார்த்தா ஒரு சூட்கேஸுடன் நிற்பது போன்று அந்த வீடியோ முடிகிறது.
வீர் சாவர்க்கர் பிறந்தநாளான நேற்று இந்த வீடியோவை ராம் சரண் வெளியிட்டுள்ளார். ராம் சரண் தயாரிப்பில், பான் இந்தியா திரைப்படமாக உருவாவதால், நிச்சயம் வித்தியாசமான கதைக்களமாக அனைவரையும் ஈர்க்கும் என்று நம்பலாம்.
நிகில் சித்தார்த்தா நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'கார்த்திகேயா 2' திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அவரது நடிப்பில் 'Spy' என்ற திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், ஜூன் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
'தி இந்தியன் ஹவுஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி இன்னும் வெளியாகாத நிலையில், விரைவில் இப்படம் குறித்த அடுத்த அப்டேட்ஸ் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.