சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் ‘ராமராஜன் 46' !

சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகும் ‘ராமராஜன் 46' !

நடிகர் ராமராஜன் கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது சாமானியன் என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவக்கியுள்ளார். இந்தப்படம் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு வருகிறார் ராமராஜன்.

அந்த வகையில் 7 ஆத்ரி ஃபிலிம் பேக்டரி சார்பில் தீனதயாளன் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கிறார் ராமராஜன். இது அவரது 46 ஆவது படமாக உருவாகிறது. ராமராஜன் நடித்துள்ள சாமானியன் படத்தின் கதாசிரியரான கார்த்திக் குமார் V என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி உள்ளதுடன் இந்த படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

சாமானியன் படத்தை தயாரித்து வரும் எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர் V.மதியழகன் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் முதன் முதலாக நடிகராகவும் அவதாரம் எடுக்கிறார்.

சாமானியன் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார். ரிச்சர்ட் பிராங்க்ளின் என்பவர் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் படத்தொகுப்பை கார்த்திக் மேற்கொள்கிறார்.

இந்த படம் குறித்து இயக்குனர் கார்த்திக் குமார் V கூறும்போது, “ராமராஜன் சார் கிட்டத்தட்ட 14 வருடங்கள் கழித்து சினிமாவில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதனால் அவர் அதற்கான சரியான கதையை தேடியபோது, நான் எழுதியிருந்த சாமானியன் கதை அவருக்கு ரொம்பவே பிடித்துப் போனது. முழுக்க முழுக்க கதையை நம்பியே அவர் சாமானியன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அந்த படத்தை முடித்ததும் என்னை அழைத்து, அடுத்ததாக இன்னொரு படம் பண்ண தயாராகி விட்டேன். அதனால் இந்த படத்தை நீங்களே இயக்கினால் நன்றாக இருக்கும் என என்னை உற்சாகப்படுத்தினார் ராமராஜன். அதனால் இந்த படத்தின் மூலம் நான் இயக்குனராகவும் மாறி உள்ளேன்.

இந்த புதிய படத்திற்கு ராமராஜனை மனதில் வைத்தே கதையை உருவாக்கி உள்ளேன். இப்போது மக்களில் பலரும் சந்திக்கும் ஒரு சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டது தான் இந்த கதையும்.

இந்த படத்தில் நடிகர் ராமராஜன் இதுநாள் வரை பார்த்த கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு ஒரு சாதாரண வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். அவருக்குள் தற்போது இருக்கும் எண்ணங்களும் ஆர்வமும் கடந்த ஒரு வருடமாக அவருடன் பயணிப்பதால் எனக்கு நன்றாகவே தெரியும். அந்த வகையில் இதுவரை பார்த்திராத ஒரு ராமராஜன் படமாக மிகப்பிரமாண்டமாக மாஸான படமாக இது இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com