மீண்டும் இணைந்தார்களா ராமராஜன் - நளினி? அவரே சொன்ன பதில்!

ramarajan nalini
ramarajan nalini
Published on

ராமராஜனும், நளினியும் சேர்ந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் வட்டமிட்டு வரும் நிலையில், இதுகுறித்து வெளிப்படையாக ராமராஜன் தற்போது பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஒரு வருடம் ஓடி சாதனையும் படைத்துள்ளது.

இன்றளவும் 'கரகாட்டக்காரன் ராமராஜன்' என்ற பெயர் தான் உலாவி வருகிறது. அடுத்தடுத்து கால் ஷீட்டுகளை அடுக்கி வைத்த சாதனை இவரையே சாறும். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வென்றவர் இவர்.

விருதுநகரை சேர்ந்த இவருக்கு கிராமத்துக்காரன் என்ற முகம் இயற்கையிலேயே அமைந்திருக்கும். இதுவே இவருக்கு லக்கியாகவும் இருந்தது. மேலும் பல படங்ளில் நடிக்க வாய்ப்பும் அமைந்தது. இயக்குநராக இருந்து ஹீரோவான நடிகர் ராமராஜ் அனைத்து வகையான ரசிகர்களின் மனதையும் வென்றுவிட்டார். இவர் படங்களுக்கு தியேட்டர்களில் கல்லா கட்டும் என்றே சொல்லலாம்.

சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டை எதிர்த்து தான் ராமராஜன் நளினி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் எம்ஜிஆர் தலைமையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. அருண் என்ற மகனும், அருணா என்ற மகளும் இவர்களுக்கு உள்ளனர். 1987 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவரும் 2000 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர்.

எனினும், நளினி தனது கணவர் ராமராஜனை இன்னமும் காதலித்து வருவதாக தன்னுடைய ஒவ்வொரு பேட்டியிலும் கூறி வருகிறார். இதே போன்று தான் ராமராஜனும் நளினி மீது அன்பும், மரியாதையும் வைத்திருப்பதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் தான் ராமராஜன் மற்றும் நளினி இருவரும் மீண்டும் சேர்ந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், இதற்கு ராமராஜன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்துள்ளார். இவர்கள் இருவரும் தங்களின் பிள்ளைகளுக்காக மீண்டும் சேர்த்து வாழ முடிவு செய்ததாக கூறப்பட்ட நிலையில், இந்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறுகையில்... "நடக்காத ஒரு விஷயத்தை ஏன் இப்படி பேசுகின்றனர் என்பது எனக்கு தெரியவில்லை. நானும் நளினியும் இணைந்து விட்டோம் என்பதில் துளியும் உண்மை இல்லை. இனிமேல் நடக்கவே நடக்காத ஒரு விஷயம் இப்படி உண்மை போல் பேசுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் பிரிந்து 25 வருடங்கள் கடந்துவிட்டன. தனியாக வாழ பழகி விட்டேன். இதுபோன்ற வதந்திகளால் எங்கள் இருவரின் மனதும் வருத்தமடைகிறது. எங்களுடைய பிள்ளைகளும் இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே இது போன்ற வதந்தியை கிளப்பும் நபர்கள் புரிந்து கொள்ளவேண்டும்," என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com