'ராணுவ வீரன்'... 43 வருடங்களை தாண்டி... ஒரு ரீகால்!

Ranuva Veeran
Ranuva VeeranImg Credit: Mossymart

இன்று விறு விறு வென வளர்ந்துவிட்ட டெக்னாலஜியின் காரணமாக நிறைய திரைப்படங்கள் வெளி வருவதுடன், அவற்றை உடனடியாக நம் கைபேசியிலேயே பார்த்தும் விடுகிறோம்.

ஆனால் திரைப்படங்கள் மட்டுமே மக்களின் பொழுதுபோக்காக இருந்த காலம் உண்டு ஒவ்வொரு தீபாவளிக்கும், பொங்கலுக்கும் வெளிவரும் படங்களைப் பார்க்க மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்த காலம் அது.

அப்படி 1981ஆம் ஆண்டில் தீபாவளி வெளியீடாக (அக்டோபர் 26) வெளியான படம்தான் ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன். பாக்யராஜின் அந்த 7 நாள்கள், சிவாஜியின் கீழ்வானம் சிவக்கும், கே. பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர், கமல் நடித்த டிக் டிக் டிக் போன்ற படங்களிடையே அதிக எதிர்பார்ப்புடன் வெளிவந்த ரஜினியின் படம்தான் ராணுவ வீரன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் எஸ்பி முத்துராமன் கூட்டணியில் உருவான படம் இது. அப்போது பிரபலமாக இருந்த சத்யா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட படத்தில், அந்த நிறுவனத்தின் கதை இலாகா திரைக்கதையை அமைத்திருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்தது போல் வெற்றியை பெறாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவியது. படம் சற்று நாடகத்தனமாக இருந்தது காரணம் என்ற விமர்சனங்களும் எழுந்தன.

தீபாவளி சமயத்தில் தமிழ் ஹீரோ ரஜினி - தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்தது ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது என்றாலும். அதில் நடித்த ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், தெலுங்கில் சிரஞ்சீவி ஆகியோர் அப்போது உச்ச நட்சத்திரங்களாக இருந்த போதும், ரசிகர்களுக்கு தேவையான காதல், சண்டை, காமெடி போன்ற ஜனரஞ்சக விஷயங்கள் இருந்தும், படம் பெரிதாக எடுபடவில்லை.

இந்தப்படத்தின் கதை மற்றும் காட்சிகள் எம்ஜிஆரை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை என்றனர். அப்போது அவர் தீவிர அரசியலில் இறங்கி விட்டதன் காரணமாக ரஜினிக்கு பட வாய்ப்பு சென்றது என்றும் பேச்சு அடிபட்டது. காரணம் ஸ்டைல் மன்னனாகவும், எம்ஜிஆரை போல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் கிங்காவும் ரஜினி அப்போது அந்தஸ்து பெற்றிருந்ததே!

ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்த ராணுவ வீரானான ரஜினி, நக்சல் கும்பலை சேர்ந்த தலைவனும் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியுமான சிரஞ்சீவியை அழிப்பதே படத்தின் ஒன்லைன் கதை. இதில் திருப்புமுனை விஷயமாக அந்த நக்சலைட் தலைவனே ரஜினியின் நண்பனாகவும், அவரது தங்கையான நடிகை லலிதாவின் கணவனாகவும் இருந்ததுதான். படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப ராணுவ வீரர் கதாபாத்திரத்துக்கு தகுந்த முறுக்கு மீசையுடன் லுக்கை மாற்றியிருந்த ரஜினியும், பாவாடை மேற்சட்டை அணிந்து கலகலப் பெண்ணாக ரஜினியின் காதலியாக வரும் அழகான ஸ்ரீதேவியும் நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போட்டனர்.

இதையும் படியுங்கள்:
"புறா பந்தயத்தால் வாழ்க்கையை தொலைத்தவர்கள் அதிகம்" - பைரி இயக்குநர் 'ஜான் கிளாடி' நேர்காணல்!
Ranuva Veeran

எம்எஸ் விஸ்வநாதன் இசையில் "சொன்னால் தானே புரியும், என்னைக் கண்ணால் பாரு தெரியும்..." என்ற காதல் பாடலும், எஸ் பி பியின் கம்பீரக் குரலில் "வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் வீரம் விளையாட வெற்றி நடைபோட காலம் நமதென்று சொல்லுங்கள். " எனும் தேசபற்றுப் பாடலும் அப்போது சூப்பர் ஹிட் பாடல்களாக அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. இதில் கேரளாவின் கதகளி வேடம் அணிந்து ரஜினி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார்.

ரஜினியும் சிரஞ்சீவியும் போடும் சண்டை காட்சிகள் அனைத்தும் பேசப்படும் விதமாகவே அமைந்திருந்தன.

எந்தக் காலமாக இருந்தாலும் பெரிய நடிகர் நடிகைகள் கூட்டணி இருந்தாலும் சுவாரஸ்யம் அல்லது ஏதோ ஒன்று குறைந்தால் மக்களிடம் பெரிதான வரவேற்பு இருக்காது என்பதற்கு ராணுவ வீரன் சான்று. இருப்பினும் ரஜினியின் பங்கு பொருத்தவரை, காலங்கள் கடந்தாலும் பேசப்படும் சூப்பர் ஸ்டாரின் படங்களில் ராணுவ வீரனும் இணைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com