விமர்சனம் - ரசவாதி: தலைப்பு ஸ்ட்ராங், திரைக்கதை வீக்!
ரேட்டிங்(3 / 5)
‘மௌனகுரு’, ‘மகாமுனி’ படங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்த சாந்தகுமார் ‘ரசவாதி’ படத்தை இயக்கியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் வெளியாகியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் சித்த மருத்துவராக பணியாற்றும் நம்ம ஹீரோ அர்ஜுன் தாஸும், ஹீரோயின் தன்யா ரவிச்சந்திரனும் காதலிக்கிறார்கள். கொடைக்கானலுக்கு வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஷங்கர் இவர்களின் காதலை பார்த்து பொறாமைப்பட்டு இவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார். வில்லனுக்கு ஒரு பிளாஷ்பேக், ஹீரோவுக்கு ஒரு பிளாஷ்பேக் என படம் செல்கிறது...
தமிழ் சினிமாவுக்கு மலையாளத்திலிருந்து மிகச் சிறந்த நடிகர்கள் அறிமுகமாகும் சீசன்போல இது. லால், பகத் பாசில் வரிசையில் ‘ரசவாதி’ படத்தில் சுஜித் சங்கர் என்ற சிறந்த கலைஞரை அடையாளம் காட்டி உள்ளார் இயக்குநர் சாந்தகுமார். சுஜித் சங்கர் இதற்கு முன்பு தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் இப்படத்தில்தான் தான் யார் என்பதை நிரூபித்து உள்ளார். (சுஜித் சங்கர் மறைந்த கேரள முதல்வர் நம்பூதிரி பாட் அவர்களின் பேரன்.) ‘ரசவாதி’ படத்தில் பரசு ராஜ் என்ற சைக்கோ போலீஸ் அதிகாரியாக நடித்துப் பயமுறுத்தி உள்ளார். மலையாள வாடையுடன் தமிழ் பேசி போலீஸ் அதிகாரியாகவும், கொடூர சைக்கோ கணவனாகவும் இவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் கைதட்டல் பெறுகின்றன. இவர் வசனத்தில் சிறிது நகைச்சுவையும் இருக்கிறது.
இப்படத்தில் ரேஷ்மா வெங்கடேஷ், தன்யா ரவிச்சந்திரன் என்ற இரு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள். தன்யா நன்றாக நடித்திருக்கிறார். இருப்பினும் இவரைவிட நடிப்பில் அதிக அளவு ஸ்கோர் செய்வது ரேஷ்மாதான். மதுரைக்கார சுட்டி பெண்ணாகவும், சைக்கோ கணவனிடம் மாட்டித் தவிக்கும்போதும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ரேஷ்மா. பாடல் வரிகள் இல்லாத இசையை மட்டுமே பின்னணியாகக்கொண்ட பாடலில் ஷோபனா மற்றும் ரேவதியை நினைவுபடுத்துகிறார்கள்.
கதாபாத்திர உருவாக்கத்திலும், சரியான நடிகர்கள் தேர்விலும் சரியாக செயல்பட்ட இயக்குநர் சாந்தகுமார் படத்தின் திரைக்கதையை வலுவாக அமைக்கவில்லை என்றே சொல்லவேண்டும். படத்தின் முதல் பாதி மிக மெதுவாக நகர்கிறது. சாந்தகுமாரின் முந்தைய படைப்புகளான ‘மகா முனி’, ‘மௌனகுரு’ படங்கள் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். ‘ரசவாதி’யில் இது மிஸ்ஸிங்.
தமிழ்நாட்டு மக்களுக்கு அதிகம் தெரியாத மதுரையின் சமண மலை பற்றியும் இது உடைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் சொன்னதற்கு இயக்குநருக்கு சபாஷ் போடலாம்.
படத்தை ஓரளவு ரசிக்க வைப்பது தமனின் பின்னணி இசையும், சேதுவின் சிறப்புச் சப்தமும்தான். இரண்டும் இணைந்து படத்திற்குச் சண்டை திரில்லர் பார்வையைத் தருகிறது.
‘ரசவாதி’ என்ற ஆளுமை மிக்க தலைப்புக்கு ஏற்றார்போல திரைக்கதையும் அமைந்திருந்தால், இந்த ‘ரசவாதி’ இன்னும் பல உயரங்களைத் தொட்டிருப்பான்.