சமீபகாலமாகவே சரித்திர நாவல்கள், வரலாற்றுக் கதைகள் கொண்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
எத்தனையோ வரலாற்று காவியங்கள் திரையில் வந்தாலும், 2015ல் வெளியான ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் பிரம்மாண்டம் தென்னிந்திய திரையுலகை ஹாலிவுட் அளவிற்கு பார்க்கும்படி வியக்க வைத்தது.
அதைத்தொடர்ந்து அடுத்தடுத்து சில வரலாற்றுப் படங்களும் வந்தது. அந்த வரிசையில் கோலிவுட்டில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்து மற்றுமொரு சரித்திர புனைக்கதை தொடரான வேள்பாரி திரைப்படமாக உருவாகவிருக்கிறது.
இதை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கப்போவதாக ஏற்கெனவே தகவல் வந்த நிலையில், இதில் கதாநாயகனாக யாஷ் நடிக்க உள்ளதாகவும், தற்போது இந்த திரைப்படம் பல நூறு கோடி செலவில் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
தற்போது இயக்குநர் ஷங்கர், உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2, தெலுங்கில் ராம்சரனின் ஆர் சி 15 படங்களை மும்முரமாக இயக்கி வரும் வேளையில், அடுத்த பிரம்மாண்ட படத்திற்கான வேலைகளையும் கவனிக்க முற்பட்டு வருகிறார்.
ஏற்கெனவே வெளியான பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று காவியங்கள் ரசிகர்களிடையே பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வேள்பாரி எப்போது வெளிவரும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.