
தமிழ் சினிமாவில் தனது யதார்த்த நடிப்பால் இளம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் ரவி மோகன். இவர் 2003-ம் ஆண்டு தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். இவரது நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, மழை, சந்தோஷ் சுப்பிரமணியம், பேராண்மை, நிமிர்ந்து நில், தனி ஒருவன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தன என்று சொல்லலாம்.
ஜெயம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் தலைப்பையே தனது பெயரின் முன்னால் அடைமொழியாக சேர்த்துகொண்ட அவர் சமீபத்தில் ஜெயம் அடைமொழியை துறந்து ரவி மோகன் என்று அழைப்பதையே விரும்புவதாக சமூக வலைதளத்தில் அறிவித்தார். தனது 22 ஆண்டு திரையுலக வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து, இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ரவி மோகன் கடைசியாக காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றிப்படமாக அமையாவிட்டாலும் ஒரளவு நல்ல பெயரை பெற்றது.
கடந்த சில நாட்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும் எதைபற்றியும் கவலைப்படாமல் தனது புதிய பாதையில் முன்னோக்கி சென்று கொண்டு இருக்கிறார். அந்த வகையில் விரைவில் இயக்குனராக களமிறங்க உள்ள அவர், தனது முதல் படத்தை யோகி பாபுவை வைத்து இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ரவி மோகன் தனது சமூகவலைதள பக்கத்தில் தான் புதியதாக ஸ்டுடியோ ஒன்று தொடங்கி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். ‛ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்று தனது பெயரிலேயே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள ரவி மோகன் இந்த நிறுவனத்தின் மூலம் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தற்போது தயாரிப்பாளர் என ரவி மோகனின் புதிய பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இவர் தற்போது கணேஷ் கே பாபு இயக்கும் கராத்தே பாபு மற்றும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி ஆகிய இரண்டு படங்களிலும் அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்து வருவது குறிப்பிட்டத்தக்கது. இதற்கிடையே ரவிமோகன் நடிப்பில் உருவான ஜீனி திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.