நமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த பின்பு, இந்தியாவில் இருந்த சமஸ்தான ராஜ்ஜியங்களை இந்தியாவுடன் இணைத்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல். பல சமஸ்தானங்கள் பல போராட்டங்களுக்கு பிறகே இந்தியாவுடன் இணைந்தன. குறிப்பாக ஹைதராபாத் சமஸ்தானம் மிகப்பெரிய போராட்டங்களை சந்தித்த பின்பே இந்தியாவுடன் இணைந்தது.
1947 ல் சுதந்திரம் கிடைத்த பின்பு, ஹைதராபாத் பகுதியை ஆண்ட நிஜாம் ஹைதராபாத் பகுதியை மட்டும் பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பினார். ஒரு கட்டத்தில் ஹைதராபாத் பகுதியை மட்டும் 'துர்கிஸ்த்தான்' என்று பெயரிட்டு தனி நாடாக்க விரும்பினார். இதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் மீது பல்வேறு கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டார். மக்களின் மிகப்பெரிய போராட்டமும், சர்தார் வல்லபாய் பட்டேல்லின் பெரு முயற்சியும் சேர்ந்து ஹைதராபாத் பகுதியை இந்தியாவுடன் இணைத்தது.
தெலுங்கானா தாண்டி 1948ல் நடந்த இப்போராட்டம் பற்றி இன்றைய இந்திய மக்கள் பலருக்கு தெரியாது. இந்த ஹைதராபாத் மீட்பு போராட்டம் பற்றியும், நிஜாம் மக்களுக்கு செய்த கொடுமைகள் பற்றியும் நம் மக்கள் தெரிந்து கொள்ள 'ரஸாக்கர்' என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் 'பாபி சிம்ஹா', 'வேதிகா' முக்கிய கதா பாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் தயாரிப்பாளர் குடுர் நாராயண ரெட்டி, தனது தாத்தா அவர்களிடம் சிறு வயதில் இந்த ஹைதராபாத் மீட்பு போராட்டம் பற்றியும், இப்போராட்டத்தில் நடந்த உயிரழப்புகள் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். கேட்ட விஷயத்தில் ஈர்க்கப்பட்டு இப்படம் தயாரிக்க முன் வந்துள்ளார். இந்திய மக்களுக்கு அதிகம் தெரியாத ஒரு ரத்த சரித்திரம் இது என்கிறார் நாராயண ரெட்டி. சுமார் நாற்பது கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாராகி உள்ளது. இந்த படத்தை யது சத்யநாராயணா இயக்குகிறார்.
இப்படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு பல்வேறு வரலாற்று புத்தகங்களை தேடி படித்துள்ளார். இதன் பின்பே இந்த ராஸாக்கர் படத்தின் கேரக்டரை உள் வாங்கி நடிக்க முடிந்தது என்கிறார். படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இந்த படம் மத ஒற்றுமையை குலைக்கும் என்கிறார்கள் சிலர். இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிரானது என்கிறார்கள் சிலர். இந்த படத்தில் நடித்ததற்கு பாபி சிம்ஹாவை சிலர் சமூக வலைத்தளங்களில் சாடுகிறார்கள். இந்த படம் நிஜாம் செய்த கொடுமைகள் பற்றியது. இதற்கும் மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறது தயாரிப்பு தரப்பு.
ரஸாக்கர் இன்னொரு 'காஷ்மீர் பைல்ஸ்', 'கேரளா ஸ்டோரி' போல உருவாகிறதா? எது எப்படி இருந்தாலும், சென்சார் செய்யப்பட்ட ஒரு படைப்பை மக்கள் பார்வைக்கு கொண்டு வருவதே சரியான விஷயமாக இருக்க முடியும்.