ரீரீலிஸ் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினியின் தனிக்காட்டு ராஜா - கொண்டாடிய ரசிகர்கள்!

ரீரீலிஸ் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினியின் தனிக்காட்டு ராஜா - கொண்டாடிய ரசிகர்கள்!

40 ஆண்டுகள் கழித்து மறுபடியும் ஒரு ரஜினி படம் வெளியாகியிருக்கிறது. ரஜினி நடித்த தனிக்காட்டு ராஜா, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வெளியாகியிருக்கிறது. மதுரையில் வெளியான தனிக்காட்டு ராஜா படத்தை, ரஜினி ரசிகர்கள் முதல் நாள் ரசிகர் ஷோ ஏற்பாடு செய்து பெரிய அளவில் கொண்டாடியிருப்பது இணையத்தில் செய்தியாகியிருக்கிறது.

1982 மார்ச் மாதம் வெளியான ரஜினி நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற தனிக்காட்டு ராஜா, தற்போது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு வெளியாகியிருக்கிறது. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த நேரத்தில் பாபா திரைப்படம் ரீரீலிஸ் செய்யப்பட்டதால் தனிக்காட்டு ராஜா தள்ளி வைக்கப்பட்டு, தற்போது வெளியாகியிருக்கிறது.

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்திற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த படம் திரையிடப்பட்ட திரையரங்கு ஒன்றில் ரஜினியின் புதுப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு இணையான வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கட் அவுட்க்கு ரஜினி ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்தனர். பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள். ரஜினி தோன்றும் காட்சிகளுக்கும், அவர் பேசும் வசனங்களுக்கும் கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

தனிக்காட்டு ராஜா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். கிராமத்து கதையாக இருந்தாலும் ஏராளமான ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படம். காதல் தோல்வி, அரசியல் ஈடுபாடு என ரஜினியை வித்தியாசமான களத்தில் காட்டிய எண்பதுகளின் முக்கியமான படமாக தனிக்காட்டு ராஜா வெளியாகியிருந்தது.

பின்னாளில் சங்கர் குரு, மனிதன் போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதிய வி.சி குகநாதன் இயக்கிய படம். எண்பதுகளில் முக்கியமான கதாநாயகிகளாக இருந்த ஸ்ரீதேவி, ஸ்ரீபிரியா இருவரும் நடித்த படம். படத்தின் வில்லனாக ஜெய்சங்கர் நடித்திருந்தார். இளையராஜா இசையில் வெளியான வாலியின் அனைத்து பாடல்களும் பெரிய அளவில் மக்களை சென்றடைந்திருந்தது. படத்தில் இடம் பெற்ற சந்தனக் காற்றே மற்றும் ராசாவே உன்ன நான் எண்ணித்தான் ஆகிய பாடல்கள் இன்றும் பிரபலமானவை.

படம் வெளியானபோது கல்கியில் வெளியான தனிக்காட்டு ராஜா விமர்சனமும் சுவராசியமாக இருந்தது. ஏழைகளுக்கு வக்காலத்து வாங்க நினைத்து எதிலேயோ போய் முடிகிறது. இரு கிராமங்களுக்கு இடையே எழும் பகை உணர்வு

எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார்கள் என்று ஆரம்பமாகும் பட விமர்சனம், படத்தின் குறைகளையும் பட்டியலிடுகிறது.

ஜெய்சங்கர் வெற்றுப் பேச்சு வில்லனாய் வருகிறார். கதையை எப்படி கொண்டு போகலாம் என்பதை விட ரஜினிகாந்திடம் எப்படி வேலை வாங்கலாம் என்கிற ஆதங்கம் நிரம்பி வழிகிறது. கண்மூடித் திறப்பதற்குள் கும்கும் சண்டைதான். ரஜினி சாராயத்தைக் குடித்துவிட்டு, நான்தாண்டா இப்போது தேவதாஸ் எனப்பாடுவதில் கொஞ்சம் கிக் இருக்கிறது.

புற்றில் இருந்து ஈசல் கிளம்புவது போல் ஏகப்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் வருகிறார்கள். டைரக்டர் குகநாதனுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் தர்மலிங்கத்திற்கும் படத்தில் பலத்த மோதல். வெற்றி மாஸ்டருக்குத்தான். தனிக்காட்டு ராஜா, வசூல் ராஜா என்று கல்கியில் எழுதப்பட்டுள்ளது.

தனிக்காட்டு ராஜா, அன்று மட்டுமல்ல இன்றும் வசூல் ராஜாதான் என்பதில் சந்தேகமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com