

இன்று ஒரு படத்தின் வெற்றியை அதன் திரைக்கதை, சுவாரசியத்தைத் தாண்டி, அதன் ஒட்டுமொத்த திரையரங்க வசூலை (movie box office earnings) வைத்துத்தான் எடை போடுகிறார்கள். அது முன்பின் முரண்பட்ட செய்திகளாக வெளிவந்தாலும்; சில தளங்கள் இன்னும் நம்பகமான செய்திகளை வெளியிடுகின்றன.
ஒட்டுமொத்த வசூலாய் எதைப் பார்க்கிறார்கள்? பல மொழிகள், பிராந்தியங்களில் பரவியுள்ள இந்தியத் திரைப்படத்துறை ஒரு படத்தின் வெற்றியை அளவிடுவதற்குப் பாக்ஸ் ஆபிஸ் (Box Office) வசூலையே பெரிதும் நம்பியுள்ளது. வசூல் முதன்மையாகத் திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்களால் (multiplexes) அறிவிக்கப்படும் டிக்கெட் விற்பனை மூலம் கணக்கிடப்படுகிறது. பின்னர் அவை விநியோகஸ்தர்கள் (distributors), வர்த்தக ஆய்வாளர்களால் (trade analysts) ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் தினசரி, வார இறுதி மற்றும் வாழ்நாள் வருவாய் (lifetime earnings) என அளவிடப்படும். பின்னர் அவை பெரும்பாலும் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
Sacnilk, MoneyWood மற்றும் TrackMyShow போன்ற வலைத்தளங்கள் சினிமா வசூல் பற்றிய நம்பகமான செய்திகளை வெளியிடுகின்றன. அனைத்து மொழிகளில் உள்ள வசூல், மக்கள் விமர்சனங்கள் மற்றும் பட்ஜெட்டுகள் குறித்த விரிவான அறிக்கைகளை Sacnilk வழங்குகிறது. MoneyWood லாபகரமான படங்கள் மற்றும் அதன் சதவீத வருமானங்களின் தரவுகளைத் தருகிறது.
அதே நேரத்தில் TrackMyShow வலைத்தளம், BookMyShow டிக்கெட் விற்பனையின் அடிப்படையில் நிகழ்நேரத் தரவுகளை வழங்குகிறது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட், மாலிவுட் மற்றும் சாண்டல்வுட் என்று அனைத்து மொழி படங்களின் செயல்திறனைக் கண்காணிக்க; இந்தத் தளங்கள் தொழில்துறை வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அதிக வசூல் யார் கைகளில் தஞ்சம் அடைகிறது?:
லாபத்தைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பங்கு பொதுவாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்குத்தான் செல்கிறது. அவர்கள் படத்தில் முதலீடு செய்து அதன் வெளியீட்டை நிர்வகிக்கிறார்கள். அதன்பின் திரையரங்க உரிமையாளர்களும் கணிசமாகப் பயனடைகிறார்கள்; குறிப்பாக பிளாக்பஸ்டர் வெற்றியின்போது. ஸ்ட்ரீமிங் தளங்கள் (streaming platforms), செயற்கைக்கோள் உரிமைகள் (satellite rights) மற்றும் இசை உரிமையாளர்கள் (music labels) போன்ற துணைத் துறைகள்கூடக் கூடுதல் வருவாயை ஈட்டுகின்றன.
நேரடியாக நம்மால் தகவல்களைச் சேகரிக்க முடியுமா?
ஆஃப்லைன் (Offline) அணுகலை விரும்பும் தனிநபர்கள் அல்லது சினிமா ரசிகர்களுக்கு; Box Office India (print editions) போன்ற வர்த்தக இதழ்கள் மற்றும் பிராந்திய (Regional) திரைப்பட இதழ்கள் வேண்டியத் தகவல்களை வழங்குகின்றன. கூடுதலாக உள்ளூர் திரையரங்குகள் பெரும்பாலும் பிரபலமான படங்களுக்கான வசூல் புள்ளிவிவரங்களைக் காண்பிக்கின்றன. தேவைப்பட்டால் பத்திரிகை வெளியீடுகள் மூலம் அதன் தரவைப் பகிர்ந்துகொள்கிறார்கள். எனவே, இன்று ஆன்லைன் தளங்கள் (Online websites) ஒருபுறம் ஆதிக்கம் செலுத்தினாலும்; அதே வேளையில் நேரடி முறைகளை (Offline access) விரும்புவோருக்கு இன்னும் அதற்கான வசதிகள் அணுகக்கூடியதாகவே உள்ளன.