

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்ட இந்தக் கூட்டத்தில், தமிழ்த் திரையுலகின் ஐந்து முன்னணி நடிகர்களுக்கு ரெட் கொடுப்பதென முடிவு செய்யப்பட்டு, சங்க உறுப்பினர்களிடம் அதற்கான ஒப்புதல் பெறப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழுக் கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி, இந்தக் கூட்டத்தில் ஐந்து முன்னணி தமிழ் நடிகர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார். அந்த ஐந்து தமிழ் நடிகர்கள் யார் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘‘முதற்கட்டமாக, தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் கொடுக்காமல் நஷ்டம் ஏற்படுத்திய ஐந்து நடிகர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தப் பட்டியலில் உள்ள நடிகர்களின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கத்துக்கு தகவல் அனுப்பப்படும்.
அதைத் தொடர்ந்து அந்த நடிகர்கள் மறுபடியும் அதே நிலைப்பாட்டைத் தொடர்ந்தால் அவர்களின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மேலும், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களை வைத்து படம் எடுப்பதையும் சங்கம் தவிர்த்து விடும். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு ரெட் கார்டு விதிப்பதெனவும் சங்கம் முடிவெடுத்திருக்கிறது ’’ என அவர் தெரிவித்து இருக்கிறார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நிறுவனத்திடம் முன்பணம் பெற்றுக்கொண்டு கால்ஷீட் வழங்காமல், தற்போது கமல் தயாரிப்பில் 'எஸ்டிஆர் 48' என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் சிம்பு, மறைந்த தயாரிப்பாளர் கே.பி.பிலிம்ஸ் பாலுவிடம் முன்பணம் பெற்றுக்கொண்டு அவரது படத்தில் நடிக்காத விஷால், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் எஸ்.ஜே.சூர்யா, பல தயாரிப்பாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் யோகி பாபு மற்றும் அதர்வா ஆகியோர்தான் தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கார்டு விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்ட நடிகர்களாக அறியப்படுபவர்கள் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களாக விளங்கும் இந்த ஐந்து பேருக்கு தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் கொடுக்கப்படும் என்ற எச்சரிக்கை செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகக் பேசப்படுகிறது.