விமர்சனம்: 'ரெட் லேபிள்' படத்தின் ப்ளஸ் & மைனஸ்!

Red Label movie
Red Label
Published on
ரேட்டிங்(3 / 5)

கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், எஜமான் என பல வெற்றி படங்களை தந்தவர் டைரக்டர் ஆர்.வி உதயகுமார் தற்போது படங்கள் எதுவும் இயக்காமல் இயக்குனர் சங்க வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஒரு சில படங்களில் நடித்து வந்த இவர் தற்போது ரெட் லேபிள் (Red Label) என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

பிரபல எழுத்தாளர் பொன். பார்த்திபன் எழுத்தில் உருவாக்கி உள்ள இந்த படத்தை கே.ஆர் வினோத் இயக்கி உள்ளார். லெனின், அஸ்மின், அனுமோகன் நடித்துள்ள இப்படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாம்.

கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி. அங்கே மாணவர்கள் தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலில் அராஜகமாக வெற்றி பெற ஆர்.வி உதயகுமாரின் மகன் பாண்டியன் முயற்சி செய்கிறார். இவரின் அராஜகத்தை கட்டுப்படுத்த முன்னாள் மாணவர் தலைவர் லெனினை அழைத்து வருகிறார்கள். இவர் நேர்மையான முறையில் தேர்தலை நடத்த முயற்சி செய்கிறார்.

இந்த சூழ்நிலையில் கல்லூரியில் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலையை விசாரிக்க போலீஸ் கல்லூரிக்கு வருகிறது. இந்த கொலைக்கும் லெனினுக்கும், என்ன தொடர்பு? தேர்தல் நல்ல படியாக நடந்ததா? வில்லன் MLA என்ன செய்தார் என்று சொல்கிறது இந்த ரெட் லேபிள்.

இந்த படத்தின் ப்ளஸ் - கல்லூரி பின்னணியில் ஒரு பரபரப்பான திரைக்கதை அமைத்த பொன். பார்த்திபனை முதலில் பாராட்ட வேண்டும். ஒரு சாதாரண கேம்பஸ் தேர்தல், அடிதடி என்று தொடங்கும் படம் கொலைக்கு பின்பு ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக மாறிவிடுகிறது.

எடிட்டிங், திரில்லர் அனுபவத்தை உணர வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஓடாமல், குதிக்காமல் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே கொங்கு தமிழில் பேசி வில்லத்தனம் செய்கிறார் ஆர்.வி உதயகுமார். அனைவர் முன் தன் மகனை அடித்து விட்டு, பிறகு ஆறுதலாக பேசும் இடத்திலும், ஒரு சாதாரண கல்லூரி தேர்தலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை புரிய வைக்கும் இடத்திலும் ஆர்.வி ஆஹா சொல்ல வைக்கிறார்.

இவர் இப்படி வில்லதனம் செய்தால், அனுமோகன் கோவை தமிழில் நகைச்சுவை செய்கிறார். பல ஆண்டுகளாக நடிக்கும் அனுமோகனை ஏன் தமிழ் சினிமா சரியாக பயன்படுத்தவில்லை? என்ற எண்ணம் வருகிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: 'வித் லவ்' - தியேட்டருக்கு போகலாமா? வேண்டாமா?
Red Label movie

ஹீரோயின் அஸ்மின் பிரமாதமான அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும், கண்ணுக்கு இதமான, யதார்த்தமான அழகில் இருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். கிரிமினாலாஜி பேராசிரியராக வருபவர், ஆர்.வி.உதயகுமாரின் மகனாக நடிப்பவர் என பலரும் சரியான தேர்வுகளாக இருக்கிறார்கள். படத்தின் ஹீரோ லெனின் ஓரளவு நன்றாக நடித்துள்ளார். இன்னும் பயிற்சி செய்தால் சிறப்பாக நடிக்க வாய்ப்புள்ளது.

மைனஸ் - பொன். பார்த்திபன் உருவாக்கிய திரைக்கதைக்கு எற்றார் போல் ஒரு சில இடங்களில் காட்சிகளை அமைக்க முடியாமல் திணறி இருக்கிறார் டைரக்டர். உதாரணமாக கல்லூரி விழாவில் காதலன் - காதலியுடன் தப்பி செல்லும் காட்சியை சொல்லலாம். இந்த காட்சி எழுதப்பட்ட அளவிற்கு காட்சிப் படுத்த படவில்லை. எடிட்டிங் சூப்பர் என்றால் ஒளிப்பதிவு சுமார்.

இப்படி சில குறைகள் படத்தில் இருந்தாலும் புதியவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய முயற்சி செய்ததற்காக இந்த ரெட் லேபிள் குழுவை பாராட்டலாம். மலையாள சினிமாக்களில் ஒருவர் திரைக்கதை எழுதுவார். வேறொருவர் இயக்குவார். இது போன்ற ஆரோக்கியமான முயற்சிக்கு இந்த ரெட் லேபிள், 'க்ரீன் சிக்னல்' தந்துள்ளது எனலாம். ரெட் லேபிள் - எழுதிய அளவிற்கு காட்சி படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com