ரிவர்ஸ் கியர் 5.0 -தமிழ்த் திரையுலகின் பரிணாம வளர்ச்சி!

ஹரிதாஸ்..
ஹரிதாஸ்..
Published on

தமிழக திரை வரலாறு நூற்றாண்டைக் கடந்தது! சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடராஜ முதலியார் தன் இந்தியன் பில்ம் கம்பனி மூலம் ‘கீசக வதம்’என்ற சலனப்படத்தை 1916ஆம் ஆண்டு தயாரித்தாராம்.ஆனால் 1931ல் வெளிவந்த ‘காளிதாஸ்’ என்ற திரைப்படம்தான்,தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முதலில் வெளிவந்த பேசும் படமாம்.அதே ஆண்டில் ‘ஆலம் ஆரா’என்ற இந்திப்படமும் வெளிவந்ததாம்.

கர்நாடக இசை ஞானமும்,குரல் வளமும்,உடல் வனப்பும்,தமிழ் உச்சரிப்பும் மிகுதியாகக் கொண்டிருந்தவர்களே ஆரம்ப காலச் சினிமாவில் கோலோச்சி வந்தார்கள்.ஆரம்ப காலப் படங்களில் பாடல்கள் அதிகமாக இருந்தன.எனவே கர்நாடக இசை முக்கியமாகத் தேவைப்பட்டது.பாடல்களைப் பாட குரல் ஒத்துழைக்க வேண்டுமல்லவா?அத்தகுதிகள் அனைத்தும் கொண்டவர்களைத்தான் அக்காலத் தமிழ்த் திரையுலகம் ஏற்றுக் கொண்டது.

1920 களிலேயே எஸ்.ஜி.கிட்டப்பா,மேடை நாடகங்களில் பாடிச் சிறப்புப் பெற்றிருந்தார்.திருமதி கே.பி.சுந்தராம்பாளின் கணவர் அவர் என்பதைப் பெரும்பாலானோர் அறிவர்.மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர்,(எம்.கே.டி.,M.K.T)மேற்கண்ட பல திறமைகளையும் ஒருங்கே பெற்றிருந்ததால் அக்கால சூப்பர் ஸ்டாராக பிரகாசித்திருக்கிறார்.பவளக்கொடியில் ஆரம்பித்துப் பதினான்கு படங்களில் நடித்த இவரின் சில படங்கள் வரலாறு படைத்தவை!’ஹரிதாஸ்’என்ற திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் மூன்று ஆண்டுகள் ஓடி,மூன்று தீபாவளிகளைக் கண்டதாம்!

மிகச் சிறந்த நடிகரும்,மனித நேயமும் கொண்ட இவரின் பிற்கால வாழ்க்கை பரிணமிக்காமல் போனது சோகமே!ஏழிசை மன்னன் என்றும்,நாலரைக் கட்டையில் பாடுவதில் நனிசிறந்தவர் என்றும் பாகவதர் போற்றப்பட்டார்.இவரைத் தொட்டுப் பார்க்கவென்றே அக்கால ரசிகர்கள் அலைவார்களாம்!

1940-50 களில் திரு டி.ஆர்.மகாலிங்கம் பல படங்களில் நடித்தும் பாடியும் பலரது கவனத்தை ஈர்த்தார்.மதுரை சோழவந்தானைச் சேர்ந்த இவர் இசையமைப்பாளராகவும்,படத் தயாரிப்பாளராகவும் பல்துறை வல்லுனராகத் திகழ்ந்தார்.மேடை நாடகநடிகரான இவர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் படமான ‘ஶ்ரீவள்ளி’ மூலம் உயரத்தை எட்டினார்.இவர் வரை, திரைக் கதாநாயகர்களாக நடித்தவர்கள் இசையறிவு மிகுந்தவர்களாகவும்,பாடும் திறன் படைத்தவர்களாகவும் இருந்தனர்.

பின்னர் மக்கள்திலகமும்,(எம்.ஜி.ஆர்)நடிகர் திலகமும் (சிவாஜி)சினிமாத் துறையைக் கலக்க ஆரம்பித்தார்கள்.பின்னணிப் பாடகர்களும் அறிமுகப்படுத்தப் பட்டு,தேர்ந்த பின்னணி பாடகர்களின் குரலுக்குக் கதாநாயகர்கள் வாயசைத்தால் போதும் என்ற நிலை உருவானது. கதாநாயகர்களுக்கும் இசைக்குமான தூரம் மெல்ல வளரவாரம்பித்தது.நடிப்புடன் வசனம் பேசத் தெரிந்தால் போதும் என்ற வளர்ச்சி(உண்மையில் வீழ்ச்சி அல்லவா?) தமிழ்த் திரையை இறுகப்பற்றிக் கொண்டது.

இவர்கள் காலத்திலேயே திருவாளர்கள் ஜெமினி கணேசன்,முத்து ராமன்,சிவகுமார் போன்றவர்களும் ஃபீல்டில் நுழைந்தார்கள். எம்.கே.டியைப் போலவே எம்.ஜி.ஆரையும் தொட்டுப் பார்க்க ரசிகர்கள் முண்டியடிப்பார்களாம்!அவர் தனது கட்சியின் முதல் மாநாட்டைத் திருச்சியில் நடத்தியபோது,கட்சி நிதியாகப் பெண்கள் தாலிகளைக்கூடக் கழற்றிக் கொடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.மேலும் மாநாட்டுப் பந்தலில் அவர் கொஞ்சமாகக் குடித்துவிட்டு வைத்த மீதி சோடாவுக்குப் பலத்த போட்டி இருந்ததால்,பெரிய அண்டா நீரில் அதனைக் கலந்து பலரும் பருகியதாகப் பகிர்கின்றன செய்திகள்!

அவர்கள் காலத்திலேயே உலக நாயகன் கமலஹாசனும்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் தமிழ்த்திரையுலகை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். பழம்பெரும் நடிகர்கள் பெரும்பாலானோர் தங்கள் மகன்களைத் திரைக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள். நடிகர்கள் பிரபு,கார்த்திக்,சூர்யா,கார்த்தி,விஜய்,சிலம்பரசன் போன்றவர்கள் தந்தைகளின் வழியில் நடிக்க வந்தார்கள்.

இந்தக் காலக் கட்டத்தில் பின்னணிப் பாடகர்களோடு,டப்பிங் ஆர்டிஸ்டுகளும் வளர ஆரம்பித்தார்கள்.அதாவது பாடவும் வேண்டாம்;வசனம் பேசவும் வேண்டாம்;வந்து போனால் போதும் என்ற நிலை உருவாக ஆரம்பித்தது!பாடல்களைப் பின்னணிஇசைப் பாடகர்களும்,வசனங்களை டப்பிங் ஆர்டிஸ்டுகளும் பார்த்துக் கொள்வார்கள்.

நடிகர்களுக்கு எந்தச் சிரமமும் இருக்காது.இந்த விஞ்ஞான வளர்ச்சிகளை நன்கு பயன்படுத்தியே,கோடிகளில் கொழிக்கும் துறையாகத் தமிழகத் திரைப்படத் துறை வளர்ந்துள்ளது!நடிகர் மோகன், இந்த வளர்ச்சிகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட சிறந்த நடிகர் ஆவார்.பாடல்களையும்,வசனங்களையும் இவருக்காக மற்றவர்கள்

பார்த்துக் கொண்டார்கள்.நல்ல கதைகளும்,சிறந்த பாடல்களும் இவர் படங்களை ஓட வைத்தன.எனவே ‘மைக் மோகன்’என்றே இவர் செல்லமாக அழைக்கப்பட்டார்.

மூதறிஞர் ராஜாஜி அவர்கள் தனது ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கையும்,குலக் கல்வி முறையையும் நடைமுறைப்படுத்தவே பெரிதும் விரும்பினார்.தெரிந்தோ,தெரியாமலோ குலக் கல்வி முறை, அரசியலிலும்,சினிமாவிலும் கொடி கட்டிப் பறப்பதை எவராலும் மறுக்க முடியாது!

ஒரு சினிமாவின் வெற்றி என்பது ஒரு கூட்டு முயற்சியே!தலைவனாக அதில் இருப்பவர் இயக்குனர்தான்.மற்றவர்கள் அவர்களின் கீழ்தான்.நடிகர்களின் பங்கு சற்று அதிகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்!ஆனாலும் நடிகர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளமும்,மதிப்பும் அதீதமானவை!

என்ன? போகின்ற போக்கைப் பார்த்தால் இனி சினிமாத்துறையின் எல்லாவற்றையும் ‘ஏஐ’ யே பார்த்துக் கொள்ளும் என்றே தோன்றுகிறது!அதன் வளர்ச்சி எதனோடும் ஒப்பிட முடியாததாய் உயர்ந்து கொண்டே போகிறது!

உண்மையில் பார்த்தால் தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்களின் வளர்ச்சி ரிவர்ஸ் கியரில்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com