விமர்சனம்: ஓம் வெள்ளி மலை - மரபின் வேர்களை தேடி ஒரு பயணம்!

விமர்சனம்: ஓம் வெள்ளி மலை - மரபின் வேர்களை தேடி ஒரு பயணம்!
Published on

நமது தமிழ் மருத்துவத்தின் சிறப்பையும், முக்கியத்துவத்தையும் கடந்த கொரோனா பரவலின் போது புரிந்து கொண்டோம். இந்த தமிழ்நாட்டு மருத்துவத்தின் பெருமையை சொல்லும் விதமாக வந்துள்ளது ஓம் வெள்ளி மலை திரைப்படம். 

ராஜகோபால் இளங்கோவன் தயாரிப்பில் ஓம் விஜய் இப்படத்தை இயக்கி உள்ளார். அகத்தியர் பரம்பரையில் வந்த நாட்டு வைத்தியர் வெள்ளி மலையில் வாழ்ந்து வருகிறார். இவரது இரண்டாவது மகன் தவறுதலாக ஒருவருக்கு  சிகிச்சை அளித்து அந்த நபர் இறந்து விட, ஊர் வைத்தியரின் குடும்பத்தைத் தள்ளி வைக்கிறது. வைத்தியரின் மூத்த மகன் அகத்தீசனுக்கு  வைத்தியம் தெரிந்திருந்தாலும் ஊர் மக்கள் யாரும் இவரிடம் வைத்தியம் பார்த்து கொள்ள  மறுக்கிறார்கள். இந்த வெள்ளிமலை  கிராமத்திற்கு திடீரென ஒரு விதமான தோல்  அரிப்பு நோய் அனைவருக்கும் பரவுகிறது. மக்கள் தோல் நோய் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு செல்கிறார்கள்.               

ஒரு  கட்டத்தில் மருந்து கண்டு பிடிக்க மலையின் மேல் இருக்கும் வெள்ளி மலை என்ற ஊருக்கு செல்கிறார்கள்.அங்கேயும் மக்கள் இதே விதமான அரிப்பு நோயால் துன்பப்பட்டுக் கொண்டுள்ளார்கள். அகத்தீசனும் தனது ஊர் மக்களுடன் காடு மலை  மருந்து தேடி அலைக்கிறார். மருந்து கிடைக்காமல் மனம் வருந்தி அகத்தீசன் இறந்துவிடுகிறார். பின்பு என்ன ஆனது ஊர் மக்கள் அரிப்பு நோயிலிருந்து விடுதலை பெற்றார்களா என்பது மீதிக்கதை.

நமது பாரம்பரிய நாட்டு மருத்துவம், சித்தர்கள் பற்றி சொன்னதற்காக டைரக்டரை பாராட்டலாம். இதில் நடித்துள்ளவர்கள் யதார்த்தமான மண்ணின் மைந்தர்களாக உள்ளார்கள். படம் முழுவதும் எங்கேயும் தேவையற்ற  ஒப்பனை போட்டு கொள்ளாமல் நடிகர்களும் கதையும்  இயல்பாகவே உள்ளது. வட்டார மொழியும், கிராம மக்களுக்கே உரித்தான கேலியும் கிண்டலும் படம் முழுவதும் உள்ளது. படம் பரபரப்புடன் செல்வதற்கு பதில் நிறுத்தி நிதானமாக மலைகிராமத்தின் வாழ்வியலை சொல்லுவது போன்று திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. ஒரு சிறிய படம் போல் இல்லாமல் ஒரு பெரிய பட்ஜெட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது போல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமா சில நல்ல நடிகர்களை மெதுவாகத்தான் அடையாளம் காட்டியுள்ளது. சூப்பர் R சுப்பிரமணியன் இதற்கு முன் பல படங்கள் நடித்திருந்தாலும் இந்த வெள்ளிமலை படம் இவரை தமிழ் மக்களுக்கு நன்றாக அடையாளம் காட்டி உள்ளது.

தனது மருத்துவத்தை ஊர் மக்கள் உதாசினப்படுத்தும் போது, தரும் உணர்வுகள் இவரை மிக நல்ல நடிகர் என்று சொல்ல வைக்கின்றன. ஹீரோயின் அஞ்சு கிருஷ்ணா ஒரு நிஜ மலை கிராம பெண் போலவே படத்தில் வாழ்ந்து விட்டார். டைரக்டர்கள் சரியாக பயன் படுத்தினால் நல்ல இடத்தை பிடிப்பார். படத்தில் ஒரு சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் நாட்டு மருத்துவம் என்ற நல்ல கருத்தை எந்த வியாபார பூச்சும் இல்லாமல் சொன்னதற்காக படத்தை ஆதரிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com