இந்த கோடை விடுமுறையில் பொழுது போக்கிற்காக பலர் சினிமாவிற்கு செல்கிறார்கள். இப்படி செல்பவர்களை இன்னமும் வறுத்து, வதக்கி அனுப்புகிறார்கள் ரிப்பப்பரி டீம்.
சினிமாவில் பல புது முயற்சிகள் வந்து கொண்டிருந்தாலும் நாங்கள் புதிய முயற்சிகள் எதையும் செய்ய மாட்டோம் என்று சத்தியம் செய்து விட்டு வந்திருப்பார்கள் போல தெரிகிறது.
இந்த படத்தை நா. அருண் கார்த்தி தயாரித்து இயக்கி உள்ளார்.
வில்லன்கள்தான் படத்தில் காதலிப்பவர்களை ஆணவ கொலை செய்வார்கள். இந்த படத்தில் இந்த வேலையை ஒரு பேய் செய்கிறது.
ஒரு கிராமத்தில் ஒரு ஆண் பேய் அது காதலிப்பவர்களை ஆணவ கொலை செய்கிறது. இதை கண்டுபிடிக்க வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் மூன்று பேரை அந்த கிராமத்திற்கு அனுப்புகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
வழக்கம் போல நம்ம ஹீரோ அந்த ஊரில் உள்ள பெண்ணை காதலிக்கிறார். அந்த பெண் கொலை செய்யும் பேயின் தங்கை. ஒரு கட்டத் தில் பேய் கொன்றது எல்லாம் தவறான, மோசமான ஆட்கள் தான் என வாலன்டியராக ஒரு கேரக்டர் வந்து சொல்கிறது.
அப்புறம் என்ன பேய் மனம் திருந்தி காதலர்களை சேர்த்து வைக்கிறது.
ஒரு சுமாரான கதையில், திரைக்கதை பற்றி எந்த வித கவலையும் கொள்ளாமல் படம் தந்துள்ளார் டைரக்டர். நகைச்சுவை என்ற பெயரில் பேய் கத்தல் கத்துகிறார்கள்.
இசை இரைச்சலாக மாறி நம் காதுகளை பதம் பார்க்கிறது. மாஸ்டர் மஹேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது கூட இதை விட நன்றாக நடித்துள்ளார். இந்த படத்தில் நன்றாக நடிக்க வாய்ப்பும் இல்லை. இவர் காமெடியனா? ஹீரோவா? காமெடி ஹீரோவா என்ற குழப்பமே மிஞ்சுகிறது.
ஒரு கதையை வைத்து கொண்டு இதை எப்படி மேற்கொண்டு நகர்த்தி செல்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்கள்.
பேய் மேக் அப்பை பார்த்தால் பயம் வர வேண்டாமா? நமக்கு பரிதாப உணர்வு தான் வருகிறது.
ஹீரோயின் காவியா வருகிறார் போகிறார். படத்தில் ஒரே ஆறுதலான விஷயம், மகேந்திரன் கேரக்டருக்கு போட்டியாக காதலிக்கும் நபரின் கேரக்டர்தான். இவர் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.
மாஸ்டர் மஹேந்திரனுக்கு ஒரு அட்வைஸ். தம்பி நீங்க குழந்தை நட்சத்திரமா நடித்த போது பலருக்கு உங்களை பிடிக்கும். இப்போது ஹீரோவாக உங்களை பிடிக்கணும்னா நல்ல கதை அம்சம் உள்ள படங்களை செலக்ட் பண்ணி நடிங்க.
ரிப்பப்பரி - கோடை கால வெயிலின் கொடுமையே பரவாயில்லை.