கர்நாடகாவை சேர்ந்த நடிகரான ரிஷப் ஷெட்டி தனது காந்தாரா திரைப்படத்தின் பெரிய வெற்றியின் மூலம் தேசிய அளவில் பிரபலம் ஆனார். சமீபத்தில், 70 வது தேசிய திரைப்பட விருதுகளில் காந்தாரா படத்தில் நடித்ததற்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ரிஷப் பேசும் பொழுது இந்திய திரைப்படங்கள், குறிப்பாக பாலிவுட், பெரும்பாலும் இந்தியாவை எதிர்மறையாக சித்தரிக்கிறது. கலைப் படங்கள் என்று அழைக்கப்படும் சில திரைப்படங்கள் சர்வதேச நிகழ்வுகளில் காட்சிப்படுத்தப்பட்டு சிறப்பு கவனம் பெறுகின்றன. என்னைப் பொறுத்தவரை, "என் தேசம், என் மாநிலம், என் மொழி ஆகியவை பெருமைக்குரியவை. உலகிற்கு ஒரு நேர்மறையான வெளிச்சத்தில் அவற்றை வழங்குவதை நான் நம்புகிறேன், அதைத்தான் நான் செய்ய முயல்கிறேன்" என்று கூறினார். அவர் பாலிவுட் திரையுலகம் இந்தியாவை உலகிற்கு தவறாக காட்டுவதாக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ரிஷப் ஷெட்டியின் பாலிவுட் மீதான இந்த விமர்சனம் இந்திய சினிமா உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது.
ரிஷப்பின் கருத்துக்கள் பாலிவுட் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிலர் அவரை 'பாலிவுட் வெறுப்பாளர்' என்று முத்திரை குத்தி குற்றம் சாட்டினர். ஒரு படத்தில் வெற்றி பெற்று விட்டு ஓவராக பேசுவதாக விமர்சனம் செய்தனர். கந்தாராவில் ஒரு காட்சியில் ரிஷப் தனது மனைவியாக நடித்த சப்தமி கவுடாவின் இடுப்பை கிள்ளுவதைப் போல படமாக்கி இருப்பார். அந்த காட்சியை தொடர்ச்சியாக பகிர்ந்து பாலிவுட் ரசிகர்கள் அவரை கேலி செய்தனர்.
இந்த சர்ச்சை இந்தியாவை உயர்வாக வெளிப்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களை கொண்டதாகவும் அதில் சினிமாவின் பங்கு சரியானதாக இருக்க வேண்டும் என்று கன்னட திரை ரசிகர்கள் ரிஷப்பிற்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டனர். பாலிவுட் இந்தியாவை சித்தரிப்பது குறித்த ரிஷப்பின் விமர்சனம் ஒரு பிரச்சனையை தூண்டியிருந்தாலும், திரைப்பட தயாரிப்பாளர்கள் உணர்ச்சிகரமான திரைக் கதைகளை பொறுப்புடன் அணுக வேண்டியதன் அவசியத்தையும் புரிய வைக்க முயற்சி செய்கிறது.
ரிஷப்பின் இந்த பேச்சு, சமீபத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ்ஸை கிண்டல் செய்து பேட்டி கொடுத்த பாலிவுட் நகைச்சுவை நடிகர் அர்ஷாத் வார்சிக்கு எதிரான பதிலடியாகவும் பார்க்கப்படுகிறது. அர்ஷத் வார்சி கல்கி 2989AD படத்தில் பிரபாஸின் கதாபாத்திரத்தை ஜோக்கர் போல இருந்ததாக விமர்சித்து இருந்தார். இதனால் தென்னிந்திய சினிமாவை தாக்கும் பாலிவுட் திரையுலகை ரிஷப் சாடியதாக கருத்து நிலவுகிறது. தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சியை கண்டு பொறாமைப் படுவதாக தென்னிந்தியர்கள் பாலிவுட்டை குற்றம் சாட்டியும், தென்னிந்திய படங்கள் ஹிந்தியில் டப் செய்யப்படுவதால் தான் நிறைய வருமானம் பெறுவதாகவும் பாலிவுட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.