தூக்கல் மசாலா கதிரேசன் தயாரித்து இயக்கியுள்ள படம் ருத்ரன். ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்கள்.
எப்போதும் முனி, பேய் என நடிக்கும் லாரன்ஸ் ஒரு மசாலா படத்தைத் தந்துள்ளார். கட்டபஞ்சாயத்து, அடிதடி என்று இருப்பவர் பூமி (சரத்குமார்) இவரது ஆட்கள் மர்மான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
இதையெல்லாம் யார் செய்கிறார்கள் என்று தேடும்போது ருத்ரன் (ராகவா லாரன்ஸ்) என்று கண்டுபிடிக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன என்பதை நோக்கி பிளாஷ் பேக் செல்கிறது.
சொந்த ஊரில் பெற்றோர்களை விட்டுவிட்டு அயல் நாட்டில் வேலைக்குச் செல்லும் குடும்பத்தைக் குறி வைக்கிறது ஒரு கும்பல். வீட்டில் இருக்கும் முதியவர் களைக் கொன்று அந்தச் சொத்துக்களை அபகரிக்கிறது.
இந்தக் கும்பலை பழி வாங்க கிளம்புகிறார் ருத்ரன். இந்தக் கும்பலின் பின்னணியில் பூமியின் கைவரிசை இருப்பது தெரிய வருகிறது. பிறகு வழக்கம் போல்தான். ருத்ரன் தனி ஒரு ஆளாக நின்று வில்லன் கூட்டத்தில் இருக்கும் அனைத்து ஆட்களையும் அடித்து வீழ்த்தி பூமியை அழிக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வர வேண்டிய ஒரு மசாலா கதையை இப்போது தந்துள்ளார்கள்.
வயதான பெரியவர்களைக் கொலை செய்யும் தற்போதைய டிரெண்ட் வைத்து ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் கதையை உருவாக்கி இருக்கலாம். ஆனால், தவற விட்டு விட்டார்கள்.
இப்போது எல்லா படங்களிலும் குடிக்கும் காட்சிகளைக் காட்டுகிறார்கள். இந்தப் படத்தில் ஒரு படி மேலே சென்று மகன் குடிப்பதை பெற்றோர்களே ஆதரிப்பது போல் காட்டுகிறார்கள்.
ஜி. வி பிரகாஷின் இசையில் பாடல்களின் வரிகள் கேட்க மறுக்கின்றன. சாம் C. S பின்னனி இசை சுமார் ரகம்தான். RD ராஜசேகரின் ஒளிப்பதிவு சற்று ஆறுதலான விஷயம்.
பேய் படத்தில் வரும் லாரன்ஸ்க்கும் ருத்ரன் பட லாரன்ஸ்க்கும் பெரிய வேறு பாடு இல்லை. அதேபோன்ற பார்வை, நடிப்பு. அங்கே பேய்! இங்கே நிஜம்! அவ்வளவுதான்.
பிரியா பவானி சங்கர் அழகாக தெரிகிறார். அழகாக நடிக்கிறார். சண்டை காட்சிகள் பல இருந்தும் ஏனோ ஈர்க்கவில்லை. சண்டைக் காட்சிகளில் ஒவ்வொருவராக வந்து அடி வாங்கும் காட்சியை இன்னமும் எத்தனை நாட்களுக்குதான் வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.