விமர்சனம்: சாலா - குடி பழக்கத்திற்கு எதிரான திரைக்குரல்!
ரேட்டிங்(3 / 5)
'குடி உடல் நலத்தை கெடுக்கும், குடி வீட்டுக்கும் நாட்டிற்கும் கேடு' என்ற வாசகங்கள் திரைப்படம் ஆரம்பிக்கும்போது தவறாமல் இடம் பெறுகிறது. படத்தில் மது அருந்தும் காட்சி இடம்பெறும்போது குடி பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என கீழே ஒரு ஓரத்தில் எழுதப்பட்டிருக்கும். மற்றபடி இப்போது வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் மது அருந்தும் காட்சிகள் அதிகமாக இடம் பெறுகின்றன. இன்றைய பல படங்கள் குடிக்கு எதிராக இல்லாமல், மறைமுகமாக ஆதரவாக உள்ளன. இந்த சூழ்நிலையில், அரிதினும் அரிதாக குடிக்கு எதிரான படமாக வந்துள்ளது ‘சாலா.’ பிரபு சாலமனிடம் உதவி இயக்குநராக இருந்த மணிப்பால் ‘சாலா’ படத்தை இயக்கி உள்ளார்.
வடசென்னை பகுதியில் தங்கதுரை மற்றும் குணா இருவருக்கும் இடையே ஒயின்ஷாப் பார் எடுத்து நடத்துவதில் போட்டா போட்டி நடக்கிறது. இரு பிரிவினருக்கும் இடையே அடிதடி, மோதல் நடந்து வருகிறது. தாய், தந்தை இல்லாத சாலா சிறு வயது முதலே குணாவிடம் வளர்ந்து வருகிறான். வளர்ந்து பெரியவனானதும் குணாவிற்கு பாதுகாப்பாக இருக்கிறான். இதற்கிடையில் புனிதா என்ற இளம் ஆசிரியை குடிக்கு எதிரான பிரசாரம் செய்து வருகிறார். பல ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைக்கிறார். இதனால் ஈர்க்கப்படுகிறான் சாலா. புனிதா ஒயின் ஷாப் பாரை எடுத்து நடத்துவதை கைவிடும்படி சொல்கிறார். இருப்பினும் சாலா கேட்பதாகத் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் எதிர்பாராத மிக மோசமான சம்பவம் ஒன்று குடி பழக்கத்தால் நடக்கிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு சாலா எடுக்கும் முடிவுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தில் வரும் பல காட்சிகள், படம் நகரும் விதம் பல படங்களில் பார்த்ததையே நினைவூட்டுகின்றன. இருந்தாலும் படத்தில் இருபது நிமிடங்கள் வரை இடம்பெறும் கிளைமாக்ஸ் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்கிறது. போதையால் ஏற்படும் விபத்தை காட்சிப்படுத்திய விதம் நம்மை பதைபதைக்க வைக்கிறது. குடிப்பழக்கம் மனிதர்களையும், மனிதர்கள் எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் கனவையும் எப்படி சிதைத்து விடுகிறது என இரத்தமும், சதையுமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். சமீப காலமாக இப்படி ஒரு மனதை பாதிக்கும் கிளைமாக்ஸ் எந்த தமிழ் படத்திலும் இடம் பெறவில்லை என்று உறுதியாகச் சொல்லலாம்.
சாலாவாக நடித்திருக்கும் தீரனின் நடிப்பு ஓரளவு நன்றாக உள்ளது. முதல் படத்திலேயே 'பில்டப்' காட்சிகளை வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு ரேஷ்மாவின் நடிப்பு நன்றாகவே உள்ளது. திசனின் பின்னணி இசையில் கிளாமாக்ஸ் காட்சி மட்டுமே முதல் ரேங்க் பெறுகிறது. ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவும், புவனின் படத்தொகுப்பும் பல காட்சிகளை சலிப்படையச் செய்யாமல் இருக்க உதவுகின்றன. மது பழக்கத்தை நியாயப்படுத்துவது போல் காட்சிகளை வைக்கும் இளம் இயக்குநர்களுக்கு மத்தியில் தனது முதல் படத்திலேயே மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை கையில் எடுத்த மணிப்பால் பாராட்டப்பட வேண்டியவர். படத்தில் சில குறைகள் இருந்தாலும் எடுத்துக் கொண்ட நல்ல கருத்துக்காக மன்னித்து விடலாம். மது பிரியர்கள் இந்த சாலாவை பார்த்தால் அடுத்த முறை மதுவை தொடும் முன் யோசிக்க வாய்ப்பு உள்ளது. விபத்தில்லா தமிழகம் உருவாக மது இல்லாத தமிழகம் உருவாவது அவசியம் என்கிறது சாலா. சாலா - 'மது அரக்கனின் கொடூர முகம்.'