

பிரபல கர்நாடக இசைப்பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் வேடத்தில் வித்யா பாலன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது; அதன் பிறகு அதைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தொடர்ந்து த்ரிஷா, நயன்தாரா போன்றோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது சாய் பல்லவி இறுதி செய்யப்பட்டுள்ளார். இந்த முதன்மையான கதாபாத்திரத்திற்காக அவர் கர்நாடக இசையை தீவிரமாக கற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பாரம்பரிய இசையில் அழியாத முத்திரையைப் பதித்து இசையுலகின் அடையாளமாக திகழ்ந்த சிறந்த பாடகியின் சாதனைகள் மற்றும் செல்வாக்கை மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் இப்படம் தயாரிக்கப்பட உள்ளது.இப்படத்தை தெலுங்கில் ஜெர்ஸி, கிங்டம் படங்களை இயக்கிய கௌதம் தின்னூரி இயக்குகிறார்.
2004-ஆம் ஆண்டு தனது 88-வது வயதில் மறைந்த 'எம்.எஸ். அம்மா', இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' (1998) பெற்ற முதல் இசை கலைஞர் ஆவார். மேலும், 1954-இல் பத்மபூஷன், 1968-இல் சங்கீத கலாநிதி (இந்த விருதைப் பெற்ற முதல் பெண்), 1966-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்திய இசைக்கலைஞர் எனப் பல பெருமைகளை அவர் பெற்றுள்ளார். 1974-ஆம் ஆண்டு ரமோன் மகசேசே விருதையும் வென்றவர். 1938 முதல் 1947 வரை திரைப்படங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற அவர், 'சேவாசதன்' மூலம் அறிமுகமாகி 'மீரா' திரைப்படத்தின் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்டார்.
ஏற்கனவே தெலுங்கில் நடிகை சாவித்திரியின் பயோப்பிக்கான மகாநதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது. அதுபோல் எம் எஸ் சுப்புலட்சுமியாக சாய் பல்லவி நடித்து வெளியாக இருக்கும் இந்த படமும் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.