சினிமாவுக்காக பல கலைகள் கற்றுக்கொண்ட சகலகலாவல்லவன் கமல்ஹாசன்!

Sakalakalavallavan Kamalhassan
Sakalakalavallavan Kamalhassan

இன்று 70வது வயதில் அடியெடுத்து வைக்கும் 'உலகநாயகன்' கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தனது ஐந்தாவது வயதில் 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் தனது திரை உலக பிரயாணத்தை தொடங்கிய கமல், இன்று வரை சினிமாவை நேசிக்கும், சுவாசிக்கும் ஒரு கலைக்காதலனாகவே இருந்து வருகிறார். 'சகலகலாவல்லவன்' என்ற புகழோடு விளங்கும் கமல், சினிமாவுக்காக கற்ற கலைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

AVM குழுமத்தின் M. சரவணனால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், தனது பதின்ம வயதில் T.K.S சபா என்ற நாடக குழுவில் இணைந்தார். அங்கு இருந்த போது நாடகங்களில் பேசும் வசன முறை, கலைஞர்களுக்கு போடப்படும் மேக்கப் என பல விஷயங்களை கற்றுத்தேர்ந்தார். நடிப்பின் மீது அவருக்கு அதீத ஆர்வம் ஏற்படவும் இந்த அனுபவமே வழி வகுத்தது.

கமலின் சகோதரி நளினி ஒரு பரதநாட்டிய கலைஞர் என்பதால் பரதத்தின் மீது இயல்பான ஈர்ப்பு இருந்தது. ஒரு முறை கமல் தனது தாயாருடன் ஒரு குச்சுப்புடி நடன நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அதில் ஒரு தாம்பாளத்தின் மீது நடனமாடிய பாங்கு அவரை வெகுவாக கவர்ந்தது. தானும் நடனம் கற்க வேண்டும் என தனது அன்னையை நச்சரிக்க ஆரம்பிக்க, நடராசன் என்ற நடன ஆசிரியர் அவருக்கு முதல் ஆசான் ஆனார். முறையாக நடனம் பயின்று அரங்கேற்றமும் செய்தார் கமல். பரதம், குச்சிப்புடி மற்றும் கதக் என்ற மூன்று வித நடனங்கள் கற்றுக்கொண்டார் கமல். பல வருடங்களுக்கு பின்னர் தங்கப்பன் மாஸ்டரிடம் கதகளி நடனமும் பயின்றார். இந்த திறமைகளை அவர் முழுமையாக வெளிப்படுத்தியது 'சாகர சங்கமம்' (தமிழில் சலங்கை ஒலி) படத்தில்தான்.

நடனம் பயின்றவர்களுக்கு இசையின் மீதும் ஈர்ப்பு இருப்பதில் ஆச்சரியம் இல்லையே. K. பாலச்சந்தரின் மோதிர விரலால் குட்டுப்பட்டு ஒரு இளைஞனாக திரைத்துறையில் முத்திரை பதிக்க ஆரம்பித்த கமலுக்கு ஒரு பெரிய மேடை அமைத்த படம் 'அபூர்வ ராகங்கள்'. இந்தப் படத்தில் ஒரு மிருதங்க இசைக்கலைஞனாக தோன்றுவார் கமல். இதற்காக முறையாக மிருதங்கம் பயின்றார். பாலச்சந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' படத்துக்காக 'ஹார்மோனிகா' என்ற இசைக்கருவியை இசைக்கக் கற்றுக்கொண்டார். 1977ல் வெளியான 'அவர்கள்' படத்திற்காக அவர் கற்றது வென்ட்ரிலோக்விசம் (ventriloquism) என்றழைக்கப்படும் வித்தை. இது வாயைத்திறக்காமல் பேசி குரலை வேறு இடத்திலிருந்து ஒலிக்குமாறு செய்யும் ஒரு அதிசய கலை. கமல் தயாரிப்பில் வெளியான அவரது 100 வது படமான ராஜ பார்வைக்காக வயலினும் வாசித்துப் பழகினார்.

Kamalhassan Thug Life
Kamalhassan Thug Life

கர்நாடக சங்கீதத்தின் ஆரம்ப நிலை பயிற்சிகள் எடுத்த காரணத்தால் கமல்ஹாசன் ஒரு சிறந்த பாடகராகவும் திகழ்கிறார். 'ஞாயிறு ஒளி மழையில்' என்ற பாடலின் மூலம் தமிழ்த்திரை உலகில் ஒரு பாடகராக அறிமுகமான கமல், சொந்தக்குரலில் 200க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். தான் நடிக்கும் படங்களில் மட்டுமின்றி மற்ற நடிகர்களுக்கும் பின்னணி பாடிய பெருமையும் இவருக்கு உண்டு.

இயல், இசை, நாடகம் என அனைத்துக் கலைகளிலும் தேர்ந்த கமல்ஹாசன், சினிமாவின் தொழில்நுட்பக் கலையையும் விட்டு வைக்கவில்லை. 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வளர்ச்சி குன்றிய மனிதனாக நடித்ததில் பல தொழில்நுட்பம் இருந்ததாகவும் அவற்றை மேலை நாடுகள் சென்று பயின்று வந்தார் கமல் என்பதும் அனைவரும் அறிந்ததே. 'அவ்வை ஷண்முகி', 'இந்தியன்', 'தசாவதாரம்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மேக்கப்பால் முகத்தை மாற்றும் கலையையும் நன்கு அறிந்து கொண்டார்.

தான் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காகவும் புதுப்புது விஷயங்களை அறிந்து கொண்டு, அந்த படம் சிறப்பாக அமைய எல்லா விதத்திலும் மெனக்கெடுவார் என்பதாலும்தான் கமல்ஹாசன் இன்றளவும் இந்தியத் திரை உலகின் ஒரு மங்காத நட்சத்திரமாக விளங்கி வருகிறார். இந்த 'சகலகலாவல்லவன்' தனது கலையால் என்றும் சிரஞ்சீவியாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com