பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தின் ஒடிடி உரிமத்தை கைப்பற்றியது நெட்பிளிக்ஸ் நிறுவனம்.
பாகுபலி திரைப்படம் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமான தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ள சலார் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
மேலும் வில்லனாக பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஏற்கனவே வெளியான கே.ஜி.எஃப் படமும் மெஹா ஹிட் அடித்தது. தொடர்ந்து சலார் படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தபடம் முழுக்க முழுக்க அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் செண்டிமென்ட் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல் நாளிலேயே 165 முதல் 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்தியாவில் மட்டுமே ரூ.145 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. ஷாருக்கானின் டங்கி படத்துக்குப் போட்டியாக வெளியான சலார் தான் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.
அதனால், சலார் ஓடிடி உரிமையை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் முட்டி மோதியுள்ளன. இதில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் சுமார் 150 கோடி ரூபாய் வரை செலவு செய்து சலார் ஓடிடி ரைட்ஸை வாங்கியதாகத் தெரிகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 12ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சலார் படம் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.