‘சேலம் தியேட்டர்களில் லியோ காட்சிகள் ரத்து’ – தீயாய் பரவிய பகிர்வு!

‘சேலம் தியேட்டர்களில் லியோ காட்சிகள் ரத்து’ – தீயாய் பரவிய பகிர்வு!

குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் பெண்கள் என அனைத்து வகையினரையும் கவரும் நடிகர்கள் வெகு சிலரே. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் வரிசையில் இந்த தலைமுறையினர் கொண்டாடும் இடத்தில் இருக்கிறார் நடிகர் விஜய்.


தற்போது அவரது நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம்தான்  ‘லியோ’.   செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில்  இப்படம் கடந்த 19-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.


லோகேஷ் - விஜய் கூட்டணியில் ஏற்கனவே வெளியான ‘மாஸ்டர்’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ரசிகர் கூட்டமும் மக்களும் லியோ படத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு உலகமெங்கும் வெளியான  இந்த திரைப்படம் தமிழகத்தில் சுமார் 900க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாள் வசூல் சாதனை படைக்குமா என்ற கேள்வி எழுந்தது. காரணம் படம் வெளி வருவதற்கு ஷேர் போன்ற தொடர் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பு ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்நாளில் மட்டும் உலகம் முழுவதும் 6000 தியேட்டர்களில் வெளியான லியோ 148.5 கோடி வசூலித்துள்ளதாகவும்  தமிழகத்தில் மட்டும் முதல் நாள் வசூலில் 30 கோடி என்றும் படக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
          

வசூலில் ஜெயிலரை ஜெயிக்குமா ‘லியோ’ என்பது சந்தேகமாக இருந்த நிலையில் ஜெயிலரின் முதல் நாள் வசூலை உலக அளவில் லியோ திரைப்படம் முறியடிக்க வில்லை. ஆனால் தமிழகத்தில் ‘ஜெயிலர்’ முதல் நாள் வசூல் செய்திருந்ததை மட்டும் முறியடித்தது.
       

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார்  "நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லியோ’ திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது.
‘லியோ’ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வசூலை ஈட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் 1000 கோடி ரூபாய் வசூலை அடைய வாய்ப்பு இல்லை. ஏனென்றால் வட இந்தியாவில் படத்தின் எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லை. வட இந்தியாவில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் படம் திரையிடப்படவில்லை. தமிழ்நாடு, கேரளா போன்ற தென் மாநிலங்களில் படம் மிகப்பெரிய வசூலை பெற்று சாதனை படைக்கும்" என்று பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
         

இந்த நிலையில், ‘லியோ’ படத்தால் தியேட்டர்காரர்களுக்கு லாபமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து “‘லியோ’ லாபகரமான படமாக எங்களுக்கு அமையவில்லை. என்ன காரணம் என்றால், இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு ஷேர் பங்கீடு வாங்கி உள்ளார்கள். பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விருப்பப்பட்டு போடவில்லை.அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்காரர்களையும் கசக்கிவிட்டார்கள். படம் வசூல் அதிகமா செஞ்சாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனம் இல்லை. அவங்க இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீத தொகை எங்களுடைய திரையரங்க பராமரிப்புக்கே பத்தாது. இதே படத்தை பக்கத்து மாநிலமான கேரளாவில் 60 சதவீத ஷேருடன் வெளியிட்டு இருக்கிறார்கள் இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால், இப்போ கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட கிடச்சிருக்காது”  என்றுள்ளார்.

இந்த நிலையில் ‘லியோ’ திரையிடப்பட்ட சேலம் திரையரங்குகளில் மக்கள் படம் காண ஆர்வம் காட்டாததால்  திரையரங்குகளில் பெரும்பாலான காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக செய்தி ஒன்று பரவியது. இந்த செய்தி குறிப்பு சேலம் சார்ந்த தனியார் இணையதள செய்தித் தளத்தில்  இருந்து வெளியிடப்பட்டிருந்தது.
     

இது குறித்து தகவல் அறிய சேலத்தில் உள்ள பிரபலமான திரையரங்கிற்கு சென்றோம். சேலத்தின் மையப் பகுதியான புதிய பேருந்து நிலையத்திலிருந்து அருகில் இருக்கும் ஐந்து ரோட்டில் அமைந்திருக்கும் 40 வருடங்களுக்கு மேலான பாரம்பரியமிக்க திரையரங்கு கௌரி தியேட்டர். தற்போது கஸ்தூரி சினிமாஸ் என்னும் பெயரில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

நாம் சென்றபோது தியேட்டர் உரிமையாளர் அசோக் பிஸியாக இருக்க அவர் அனுமதி பெற்று டிக்கெட் கவுண்டரில் இருந்த கேஷியர்  சபரியிடம் நிலவரம் குறித்து கேட்டோம்.

கேஷியர்  சபரி
கேஷியர் சபரி

"இந்த செய்தியில் உண்மையில்லை. படம் வந்து  எட்டு நாட்களாகிறது. நேற்று வரை சேலத்தில் ‘லியோ’ திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்புல்லாகத்தான் இருந்தது. விடுமுறை முடிந்து பணிக்கு மக்கள் திரும்பி உள்ளதால் இன்று சற்று டிக்கெட் விற்பனை குறைந்துள்ளது. அவ்வளவுதான். இதோ கோட்டை மாரியம்மன் கும்பாபிஷேகத்துக்காக இன்று உள்ளூர் விடுமுறை… அடுத்து சனி ஞாயிறு. இந்த நாட்களில் மீண்டும் தியேட்டர்கள் நிரம்பி வழியும்…" என்றார்.
      

சபரி சொல்வது போல் விடுமுறை முடிந்து முதல் நாள் என்பதால் டிக்கெட் விற்பனை சற்று மந்தமாகவே இருக்க, அதன் அடிப்படையில் இந்த செய்தி வந்திருக்கலாம் என்பதும் எந்தக் காட்சியும் ரத்து செய்யப்படவில்லை என்பதும் தெரிகிறது.
      

இது குறித்து மற்றொரு இணையதள பத்திரிக்கை யாளரான பொன்மலர் செந்தில்குமார் "சேலம் மாவட்டம் ஆத்தூரில் சில திரையரங்குகளில் மட்டுமே ‘லியோ’ படம் சொன்னபடி வெளியாகவில்லை. அதை வைத்து இந்த செய்தி  வெளியாகி இருக்கலாம் அல்லது அவர்களின் விளம்பரத்துக்காக இருக்கலாம் அவ்வளவே... சேலத்தில் எந்தக் காட்சிகளும் ரத்து கிடையாது" என்கிறார்.
  

“பரபரப்புக்காக வெளியிடப்படும் இது போன்ற செய்திகளால் ‘லியோ’ படத்துக்கு கூடுதல் விளம்பரம். அவ்வளவே” என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com