
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்து வந்தார். தனது கவர்ச்சி, அழகான சிரிப்பு, திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தனக்கென தனி இடத்தை திரை துறையில் நிலைநாட்டி பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே திருமணம், அதனை தொடர்ந்து விவாகரத்து, மயோசைடிஸ்ட் நோய் என அடுத்தடுத்த பிரச்சனைகளால் திரைத்துறையில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.
இரண்டு வருடங்களாக இவரது நடிப்பில் திரைப்படம் எதுவும் வெளியாகாத நிலையில் சமந்தா தயாரித்திருந்த சுபம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் விளம்பரங்களிலும், சமூக வலைத்தளங்களில் மட்டுமே பிசியாக இருந்து வந்த சமந்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்கள் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் சமந்தா, செல்போன்கள் குறித்து பகிர்ந்து கொண்ட ஒரு கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமந்தா கூறும்போது, ‘என் கையில் எப்போதும் வைத்திருக்கும் செல்போன் குறித்து எனக்கு ‘திடீர்' என ஒரு புதிய சிந்தனை எழுந்தது. இதையடுத்து 3 நாட்கள் என் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்' செய்தேன். யாருடனும் பேசவில்லை. யாரையும் தொடர்புகொள்ளவும் இல்லை.
யாரையும் பார்க்கவும் இல்லை. புத்தகம் படிப்பது, எழுதுவது என எந்த வேலையும் செய்யவில்லை. 3 நாட்கள் என் மூளைக்கு முழு ஓய்வு தந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.
என்னுடைய ஈகோவின் பெரும்பகுதி என் செல்போனுடன் தான் இணைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தேன். நான் யார், நான் எவ்வளவு முக்கியமானவள், நான் என்ன சாதித்தேன்? என்பதை செல்போன் தான் சொல்கிறது. அது இல்லாதபோது, நான் ஒரு சாதாரண உயிரினம் என்ற எண்ணமே எனக்கு வந்தது.
பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் செல்போன்கள் நம்மை செயற்கையான விஷயங்களில் மூழ்கடித்து விடுகின்றன. நமது முன்னேற்றத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் செல்போன் எவ்வளவு தடையாக இருக்கிறது என்பதை இந்த மூன்னு நாட்களில் முழுமையாக புரிந்துகொண்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை நான் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் அதிக வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறேன். ஒவ்வொரு நாள் காலையிலும் நான் எழுந்திருக்கும்போது உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறேன். ஏனென்றால் நான் செய்யும் பல வேலைகள் எனக்கு நிம்மதியை தருகின்றன’ என்றார்.
சமந்தாவின் இந்த கருத்திற்கு பல பிரபலங்களும் பலரும் ஆதரித்து வருகின்றனர்.